நாகப்பட்டினம், அக். 2: நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் பல மாதங்களாக பூட்டியிருக்கும் காத்திருப்பு அறையால் நோயாளிகளின் உறவினர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகே அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வந்தது. அப்போது நாகப்பட்டினம் மாவட்டத்தை சுற்றி ஏராளமான நோயாளிகள் வருகை தந்தனர். சிகிச்சை பெற வரும் நோயாளிகளை பார்ப்பதற்கும், நோயாளிகள் உடன் உதவி செய்ய இருப்பவர்கள் பயன் பெறும் வகையில் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் ரூ.11 லட்சம் மதிப்பில் நோயாளிகள் உறவினர்கள் வசதிக்காக காத்திருப்பு கூடம் திறக்கப்பட்டது.
இதன் அருகே அம்மா உணவகமும் திறக்கப்பட்டது. இதனால் பகல் நேரங்களில் மட்டும் இன்றி இரவு நேரங்களிலும் நோயாளிகளின் உறவினர்கள் பாதுகாப்பாக தங்கியிருந்தனர். வெயில் மற்றும் மழை காலங்களில் இந்த காத்திருப்பு கூடம் நோயாளிகளின் உறவினர்களுக்கு மிகுந்த பயன் அளித்தது. இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஒரத்தூரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறக்கப்பட்டது. இதனால் நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வந்த தலைமை மருத்துவமனை வேதாரண்யத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
