Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கொடூரமாக கொலை செய்யப்பட்ட அசாம் வாலிபரின் டிஎன்ஏ பரிசோதனை நிறைவு: உடலை ஒப்படைக்க நடவடிக்கை

பெரம்பூர்: பெரம்பூரில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட அசாம் வாலிபரின் டிஎன்ஏ பரிசோதனை நிறைவடைந்த நிலையில், உறவினர்களிடம் உடலை ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பெரம்பூர் ரயில் நிலையத்தில் கடந்த 5ம் தேதி காலை அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அமீர் அலி(35) என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தலை, கைகள், கால்கள் இல்லாத நிலையில், அவரது உடல் மட்டும் பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஒரு சூட்கேசில் அடைத்து வைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் புலனாய்வு செய்து கொலை செய்யப்பட்ட அமீர் அலியின் 2வது மனைவி ரஹீமா கதூன்(30) மற்றும் அவரது கள்ளக்காதலன் அஷ்ரப் அலி(36) ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். அதில், கொலை செய்யப்பட்ட அமீர் அலியின் தலை செங்கல்பட்டிலிருந்தும், அவரது உடல் பாகங்கள் தேனாம்பேட்டை அருகே உள்ள கால்வாயில் இருந்தும் மீட்கப்பட்டன.

உடல்கள் வெவ்வேறு இடத்தில் இருந்து எடுக்கப்பட்டதால் தலை, உடல் மற்றும் கை கால்கள் ஆகிய மூன்று உறுப்புகளில் இருந்தும் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டு உயிரிழந்தது அமீர் அலிதான் என்பதும், உடலுறுப்புக்கள் அவருடையது தான் என்பதும் நேற்று டிஎன்ஏ பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் உயிரிழந்த அமீர் அலியின் அண்ணன் நெல்லூரில் இருந்து நேற்று சென்னை வந்தார்.

இதேபோன்று, அசாமில் உள்ள அமீர் அலியின் தாயாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரும் சென்னைக்கு வரும் பட்சத்தில் அமீர் அலியின் அண்ணன் மற்றும் தாயாருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டு உயிரிழந்த அமீர் அலியின் டிஎன்ஏ உடன் ஒத்துப்போகிறதா என பார்த்து அதன் பிறகு அவர்களிடம் உயிரிழந்த அமீர் அலியின் சடலத்தை ஓட்டேரி போலீசார் ஒப்படைக்க உள்ளனர்.

சடலத்தை மாற்றி கொடுத்து விடக்கூடாது என்பதற்காகவும், உயிரிழந்தது அமீர் அலிதான் என்பதை அவரது குடும்பத்தினர் முழுமையாக நம்ப வேண்டும் என்பதற்காகவும் மேற்கொண்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் முடிவதற்கு ஒரு வார காலம் ஆகும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.