பெரம்பூர்: வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் சென்னை மாநகராட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் அடங்கிய சிறப்பு வார்டு குழு கூட்டம் நேற்று திருவிக நகர் மண்டல அலுவலகத்தில் நடந்தது. திருவிக நகர் மண்டல சிறப்பு கண்காணிப்பு அலுவலர் கணேசன் ஐஏஎஸ் தலைமை வகித்தார். கூட்டத்தில் திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மண்டல குழு தலைவர் சரிதா, மண்டல அதிகாரி முருகன், செயற்பொறியாளர்கள் செந்தில்நாதன், சரவணன் மற்றும் அனைத்து மாமன்ற உறுப்பினர்கள், அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் எந்தெந்த பகுதியில் அதிகமாக தண்ணீர் தேங்குகிறதோ அந்த பகுதியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டால் அந்தந்த வார்டுகளிலேயே சமையல் செய்வதற்கான இடங்களை தேர்வு செய்தல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டன. மழைக்காலத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணி செய்ய தனித்தனியாக வாட்ஸ்அப் குழுக்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.