அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா
மதுரை, நவ. 15: நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளான நவ.14 குழந்தைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, நேற்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், யா.ஒத்தக்கடை தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மாறுவேடம், பேச்சு, நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் வட்டார, மாவட்ட அளவிலான கலைத் திருவிழாப் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்குப் பள்ளியின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினர், பெற்றோர்கள் செய்திருந்தனர். அதேபோல், வரிச்சியூர், கிழக்கு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் தலைமையாசிரியர் சாந்தி தலைமையில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
இதில் குழந்தைகள் கைபேசிகளை பார்ப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மதுரை, உலகனேரி அரசு மாதிரிப்பெண்கள் பள்ளியிலும், கிழக்கு ஒன்றியம் எல்கேபி நகர் அரசு நடுநிலைப்பள்ளியிலும் குழந்தைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.