மதுரை, நவ. 15: தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில், டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரசாரம் 4.0 கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் சீனியர் பிரிவு நிதி மேலாளர் கே.பாலாஜி, சீனியர் பிரிவு பணியாளர் அதிகாரி டி.சங்கரன். ரயில்வே ஓய்வூதியதாரர்கள் உதவி கோட்ட நிதி மேலாளர் எஸ்.கோபிநாத் கலந்து கொண்டனர்.
இதன்படி ஓய்வூதியதாரர்கள் தங்கள் வீட்டிலிருந்தே டிஜிட்டல் முறையில் ஓய்வூதியம் தொடர்ந்து பெறுவதற்கான ஆயுள் சான்றிதழ் ஆவணங்களை நிரப்பி தாக்கல் செய்யலாம். மதுரை ரயில்வே மருத்துவமனை, கல்யாண மண்டபம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கத்தில் இதற்கான சிறப்பு முகாம்களும் நடைபெற்றன. ஜீவன் பிரமான் செயலி மூலம், 500க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஆயுள் சான்றிதழ்களை புதுப்பித்தனர்.
இம்முயற்சி, யுஐடிஏஐ மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறையுடன் இணைந்து, வருடாந்திர ஆயுள் சான்றிதழ் செயல்முறையை எளிதாக்கும் என்பதுடன், ஆதார் அடிப்படையிலான முக அங்கீகாரம் மூலம் வசதியை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மதுரை கோட்டத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் இந்த டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரசாரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
