உசிலம்பட்டி, நவ. 15: உசிலம்படுடி அருகே பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று அமைக்கப்பட்ட புதிய ரேஷன் கடையை, அய்யப்பன் எம்எல்ஏ திறந்து வைத்தார். உசிலம்பட்டி அருகே புதிய ரேசன் கடையை, எம்எல்ஏ அய்யப்பன் நேற்று திறந்து வைத்தார். உசிலம்பட்டி அருகே லிங்கநாயக்கன்பட்டி, மீனாட்சிபுரம் கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ரேசன் பொருட்களை வாங்குவதற்கு சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள நல்லுத்தேவன்பட்டிக்கு செல்ல வேண்டியதாக இருந்தது.
இதனால் லிங்கநாயக்கன்பட்டி அல்லது மீனாட்சிபுரத்தில் ரேசன் கடை அமைத்து பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏ அய்யப்பன், சட்டசபையில் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று, லிங்கநாயக்கன்பட்டியில் புதிய ரேசன் கடை அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதன்படி உருவான புதிய ரேசன் கடையை எம்எல்ஏ அய்யப்பன் நேற்று திறந்து வைத்தார்.
தற்காலிகமாக கிராமத்தின் கலை அரங்கில் செயல்படும் இந்த ரேசன் கடைக்கு, விரைவில் புதிய கட்டிடத்தை சொந்த செலவில் கட்டித்தருவதாக பொதுமக்களிடம் எம்எல்ஏ அய்யப்பன் உறுதியளித்தார். அவருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் விஏஓ அருள், ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் பிரபு, ஜான்சன், சசிக்குமார், அழகுமாரி, கோஸ்மின், மொக்கைவீரன், எபி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
