கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் மறியல் போராட்டம்
மதுரை, நவ. 13: தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் நேற்று, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலக உதவியாளருக்கு இணையாக கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும். உயிரிழந்த மற்றும் ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்களின் சிபிஎஸ் இறுதி தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் கிராம உதவியாளர்களுக்கு, அவரவர் கல்வி தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். கிராம உதவியாளரில் இருந்து கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வுக்கான கால வரையறையை ஆறு ஆண்டுகளாக குறைக்க வேண்டும்.
வருவாய்த் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் போது, 50 சதவீதம் கிராம உதவியாளர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் ஊர்வலமாக வந்து கலெக்டர் அலுவலகம் முன் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரைமணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.