மாணவிக்கு பாலியல் தொல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்: ஆசிரியரை கைது செய்யக் கோரிக்கை
மதுரை, நவ. 13: மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் சில மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர், உடந்தையாக இருந்த தலைமையாசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜீவா நகர் பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் குற்றம் செய்தவர்களை கைது செய்வதை விட்டுவிட்டு, மாணவிகளுக்கு நீதி கோரி போராடிய வாலிபர் சங்க மற்றும் மாதர் சங்கத்தினரை காவல்துறை கைது செய்ததை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பகுதிக்குழு செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் கணேசன், செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நரசிம்மன், லெனின் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று, பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி வழங்க வேண்டும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் என கோஷமிட்டனர்.