அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருப்பரங்குன்றம்/உசிலம்பட்டி, நவ. 12: தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் அருகில் உள்ள திருநகரில் உள்ள யூனியன் அலுவலகத்தில் அனைத்துதுறை ஓய்வுதியதாரர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தனபாண்டியன் தலைமை வகித்தார். இதில் பாலசுப்பிரமணியன், நாராயணன், பன்னீர்செல்வம், சந்திரசேகரன்,அழகுபாண்டி, விஜயபாஸ்கர், நீதிராஜா, நடராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், 70 வயதுக்கு மேல் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம், அங்கன்வாடி, கிராம உதவியாளர், வனத்துறை, ஊரக வளர்ச்சி, ஊராட்சி செயலர் ஆகியோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதே போல், உசிலம்பட்டி பேரையூர் மெயின் ரோட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் பழனி தலைமை வகித்தார். பொருளாளர் அய்யங்காளை கோரிக்கையை விளக்கினார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் செயலாளர் மாரிக்கண்ணு வாழ்த்து பேசினார். வட்டக்கிளை செயலாளர் அருண் பாண்டி முன்னிலை வகித்தார். நிறைவாக மாவட்ட துணை தலைவர் ஆதாரமிளகி நன்றி கூறினார்.