பெண்ணுக்கு கொலை மிரட்டல் தாய், மகன் மீது வழக்கு
மதுரை, நவ. 12: பெண்ணை தாக்கி கொலைமிரட்டல் விடுத்த தாய், மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை புதுஜெயில் ரோடு மில்காலனியை சேர்ந்தவர் ஷியாம்சுந்தர்(44). இவரது மனைவி நேசலட்சுமி(38). இவரது மகள் பொருட்கள் வாங்க நவ.8ம் தேதி தெருவில் நடந்து சென்றபோது, அங்கிருந்த வளர்ப்பு நாய் ஒன்று சிறுமியை விரட்டிச்சென்று காலில் கடித்து விட்டது. வீட்டிற்கு சென்று தாயிடம் சிறுமி நடந்த விபரத்தை தெரிவித்துள்ளார்.
பின்னர் வளர்ப்பு நாயின் உரிமையாளர்களான அக்னி மகன் விஜய்சாரதி(22), இவரது தாய் சத்யாவின் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்று இச்சம்பவம் குறித்து கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த விஜய்சாரதி நேசலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு, அருகில் கிடந்த கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து விஜய்சாரதியின் தாய் சத்யாவும் நேசலட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து கரிமேடு போலீசில் நேசலட்சுமி அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முகம்மதுஇத்ரீஸ் உத்தரவின் பேரில் போலீசார் மகன், தாய் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.