மதுரை, நவ.5: மதுரை சிந்தாமணி பகுதியில், தோசை கல்லால் தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர். மதுரை சிந்தாமணி ராஜமான் நகர் நாகம்மாள் கோயில் எதிரே வசிப்பவர் ஆறுமுகம் (60). இவரது மகன் சேதுபாண்டி (31). இருவரும் உறவினர் வீட்டின் கிரக பிரவேஷத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பினர். அப்போது தந்தை, மகன் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சேதுபாண்டி, தோசை கல்லால் தந்தை ஆறுமுகத்தை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரில் சிந்தாமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகன் சேதுபாண்டியை கைது செய்தனர்.


