Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

மாவட்டத்தில் நாளுக்குநாள் அதிகரிக்கும் குடிநீர் பிரச்னை; கள்ளிக்குடி யூனியன் அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்ட மக்கள்: உசிலம்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருமங்கலம்/உசிலம்பட்டி ஜூலை 30: குடிநீர் கேட்டு கள்ளிக்குடி யூனியன் அலுவலகத்தினை முனியாண்டிபுரம் கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளிக்குடி யூனியனுக்குட்பட்ட தென்னமநல்லூர் ஊராட்சிக்குட்பட்டது முனியாண்டிபுரம் கிராமம். இங்கு சுமார் 500 வீடுகள் அமைந்துள்ளன. இந்த கிராமத்தில் கடந்த 3 மாத காலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. கிராமத்தில் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட போர்வெல் தண்ணீர் இல்லாததால் வறண்டது. இதனால் கிராம மக்கள் குடிநீர் பிரச்னையில் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். இதேபோல் கடந்த திமுக ஆட்சியில் துவக்கி வைக்கப்பட்ட திருமங்கலம்- முனியாண்டிபுரம் டவுன் பஸ் சேவையும் நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவியர்கள் கிராமத்திற்கு நேரடி பஸ் வசதி இல்லாததால் ஆட்டோ பிடித்து வீடுகளுக்கு திரும்பி வரும் நிலை இருந்து வந்தது.

இதனால் மனவிரக்தியடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் திரண்டு நேற்று கள்ளிக்குடி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 3 மாத காலமாக குடிநீரின்றி தவித்து வருவதாகவும், உடனடியாக தங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் எனவும் மற்றும் நிறுத்தப்பட்ட டவுன் பஸ்சையும் மீண்டும் இயக்க வேண்டும் அலுவலக வாயிலில் அமர்ந்து கோஷமிட்டனர். இதுகுறித்து முனியாண்டிபுரத்தினை சேர்ந்த மாரிசெல்வம், கஸ்தூரி கூறியதாவது: குடிநீர் பிரச்னை அதிகளவில் உள்ளது. ஒரு குடம் ரூ.15 கொடுத்து விலைக்கு வாங்கி குடித்து வருகிறோம். இதுகுறித்து கள்ளிக்குடி யூனியன் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அனைவரிடம் மனு கொடுத்தும் பலனில்லை. இதேபோல் கடந்த திமுக ஆட்சியில் எங்கள் கோரிக்கையை ஏற்று விடப்பட்ட திருமங்கலம்- முனியாண்புரம் டவுன் பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்.

இன்று பிரச்னைக்கு தீர்வு காணும் வரையில் யூனியன் அலுவலகத்தினை காலி செய்யமாட்டோம். இவ்வாறு கூறினர். இதை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் சரஸ்வதி முனியாண்டிபுரம் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உடனே முனியாண்டிபுரம் கிராமத்திற்கு டிராக்டரில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், வரும் ஆகஸ்ட் 14ம் தேதி முதல் போர்வெல் தண்ணீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், போக்குவரத்து கழகத்தில் பேசி டவுன் பஸ் இயக்க முயற்சி மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். இதனை ஏற்று கிராம மக்கள் தங்களது முற்றுகை போராட்டத்தினை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தால் கள்ளிக்குடி யூனியன் அலுவலகத்தில் சில மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

உசிலம்பட்டி

உசிலம்பட்டி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இதில் 1வது வார்டு இருளாயி நகரில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக முறையாக குடிநீர் விநியோகம் இல்லை என கூறப்படுகிறது. மேலும் இப்பகுதியில் தெருவிளக்கு, பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதுகுறித்து உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் நேற்று மதுரை- தேனி நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த உசிலம்பட்டி நகர் போலீசார் மற்றும் நகராட்சி பொறியாளர் சசிகுமார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பின்பே அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியால் அப்பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குடிநீர் பிரச்னையால் ஆங்காங்கே சாலை மறியல், முற்றுகை போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.