Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கப்பலூர் டாஸ்மாக் மண்டல அலுவலகத்தினை முற்றுகையிட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருமங்கலம், ஆக. 29: கப்பலூரில் அமைந்துள்ள மதுரை தெற்கு மண்டல டாஸ்மாக் அலுவலகத்தினை முற்றுகையிட்டு டாஸ்மாக் ஊழியர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டாஸ்மாக் ஊழியர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், பணிபாதுகாப்பு, காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தினை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதனை வலியுறுத்தி அவர்கள் தொடர் போராட்டங்களை அறிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து தமிழக அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் ஒரு சில சங்கங்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்கின.

இந்நிலையில் தங்களது அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வரையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக டாஸ்மாக் விற்பனையாளர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இதன் ஒரு பகுதியாக மதுரை திருமங்கலத்தினை அடுத்துள்ள கப்பலூர் சிட்கோவில் அமைந்துள்ள தெற்கு மண்டல அலுவலகத்தினை முற்றுகையிட்டு நேற்று டாஸ்மாக் விற்பனையாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்க மாநில துணை தலைவர் ராமர் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் வெற்றிவேல், பொருளாளர் சங்கரலிங்கம் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தினை கைவிட்டு மாற்று வழியை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது மண்டல அலுவலகத்திற்குள் போராட்டம் நடத்தி கோஷசங்களை எழுப்ப கூடாது என அலுவலக ஊழியர்கள் எதிர்ப்பு தொிவித்ததால் அவர்களுக்கும், டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விற்பனையாளர் சங்கத்தினர் சென்று மண்டல மேலாளர் காசியிடம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

பின்னர் மாநில துணை தலைவர் ராமர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 23 ஆண்டு காலமாக பணி நிரந்தரம், ஓய்வூதியம், காலமுறை ஊதியம் கேட்டு போராடி வருகிறோம். டாஸ்மாக் கடைகளில் போதுமான அளவு இடவசதியில்லை. கழிப்பறை இல்லை. பணி பாதுகாப்பே இல்லை இதனால் மன உளைச்சலில் பணியாற்றி வருகிறோம். அண்டை மாநிலமான கேரளா போல் எங்களுக்கு பணி நிரந்தரம், சம்பள உயர்வினை வழங்க வேண்டும். நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றாவிடில் தமிழகம் முழுவதும் கடைகளை அடைத்து கடையடைப்பு போராட்டத்தினை நடத்துவோம். இவ்வாறு கூறினார்.