Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேரள அரசு பஸ்சில் அரை கிலோ கஞ்சாவுடன் மதுரை வாலிபர் கைது

மார்த்தாண்டம், ஜூன் 29: கேரளாவில் புதிதாக பதவியேற்ற காங்கிரஸ் அரசு மாநிலம் முழுவதும் போதை பொருள் தடுப்பு நடவடிக்கையாக ‘ஆபரேஷன் தூஃபான்’ என்ற பெயரில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கேரள- தமிழக எல்லை பகுதியான இஞ்சிவிளையில் சோதனை சாவடி பகுதியில் பாறசாலை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள அரசு பஸ்சை மறித்து சோதனை நடத்தினர். பஸ்சில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த ஒருவரை போலீசார் சோதனை செய்தனர்.

அவரது பையில் இருந்து அரை கிலோ கஞ்சா மற்றும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் மதுரை மாட்டுத்தாவணி பகுதியை சேர்ந்த முனிசாமி (24) என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர் தற்போது கேரளாவின் வர்க்கலா பகுதியில் தங்கியுள்ளார். முனிசாமி மீது ஏற்கனவே பைக் திருட்டு, செயின் பறிப்பு போன்ற பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. வர்க்கலா பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாறசாலை போலீசார் வழக்குப்பதிந்து முனிசாமியை கைது செய்தனர்.