Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தலையில் கல்லை போட்டு மானாமதுரை தொழிலாளி கொலை: மதுரை வாலிபருக்கு வலைவீச்சு

சுசீந்திரம், ஜூன் 29: நாகர்கோவில் அருகே புதுகிராமம் தண்டநாயக்கன்கோணத்தில் ஒரு தனியார் பள்ளி கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த பணியை மதுரையை சேர்ந்த கட்டிட ஒப்பந்தகாரர் செய்து வருகிறார். மதுரை, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் இங்கு வேலை செய்கிறார்கள். இவர்களில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த சரவணகுமார் (35), மதுரையை சேர்ந்த தங்கப்பாண்டி (40)யும் வேலை பார்த்து வந்தனர். பணிகளை செய்யும் தொழிலாளர்கள் பள்ளி வளாகத்திலேயே தங்கியுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேலை நடக்கவில்லை. காலையில் சரவணகுமார் தனது செல்போனில் யாரிடமோ தகாத வார்த்தையால் சத்தமாக பேசியுள்ளார்.

இதனை தங்கப்பாண்டி தட்டி கேட்டகவே, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு மதியம் வரை நீடித்தது. சக தொழிலாளர்கள் யாரையாவது ஒருவரை ஊருக்கு அனுப்பி வைத்து விட்டால், தகராறு நின்றுவிடும் என கருதி, தங்கப்பாண்டியை ஊருக்கு செல்லுமாறு கூறியுள்ளனர். பின்னர் சகதொழிலாளர்கள் தங்கப்பாண்டியை ஊருக்கு அனுப்புவதற்காக கோட்டார் ரயில் நிலையம் வந்தனர். அந்த வேளையில் சரவணகுமார் அதிகமாக மது குடித்துவிட்டு பள்ளி வராண்டாவில் படுத்து தூங்கினார். கோட்டாறு வந்த தங்கப்பாண்டிக்கு ரயில் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் பள்ளிக்கு திரும்பினர்.

சரவணகுமார் தூங்கிக்கொண்டு இருப்பதை பார்த்த தங்கப்பாண்டியனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அருகில் கிடந்த சிமெண்ட் கல்லை எடுத்து சரவணகுமார் தலையில் போட்டார். இதில் தலை சிதைந்து சரவணகுமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். உடனே தங்கப்பாண்டி தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு எஸ்பி (பொறுப்பு) திவ்யா, கன்னியாகுமரி டிஎஸ்பி ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து தப்பி சென்ற தங்கப்பாண்டியை தேடி வருகின்றனர்.