Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சோழவந்தான் வழியாக வாடிப்பட்டியிலிருந்து காமராஜர் பல்கலைக்கழகம், திருமங்கலம் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

சோழவந்தான், ஜூலை 27: சோழவந்தான் வழியாக வாடிப்பட்டியில் இருந்து இயங்கிய காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் திருமங்கலம் அரசு பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாடிப்பட்டியில் இருந்து சோழவந்தான், செக்கானூரணி வழியாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு காலை, மாலை இருவேளைகளில் இயக்கப்பட்ட பேருந்து மற்றும் வாடிப்பட்டியில் இருந்து திருமங்கலத்திற்கு இயக்கப்பட்ட பேருந்துகள் தற்போது முற்றிலும் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நாள்தோறும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: வாடிப்பட்டியில் இருந்து காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு இயக்கப்பட்ட நகர பேருந்தின் மூலம் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமன்றி, சோழவந்தான், செக்கானூரணி, கருமாத்தூர், நாகமலை புதுக்கோட்டை, தென்பழஞ்சி பகுதி கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பயனடைந்து வந்தனர். இதேபோல் வாடிப்பட்டியில் இருந்து திருமங்கலத்திற்கு இயக்கப்பட்ட புறநகர் பேருந்தின் மூலம் விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு செல்பவர்கள், மதுரை சுற்றி செல்லாமல் சோழவந்தான் வழியாக எளிதாக சென்று வந்தனர். இதுவும் தற்போது சோழவந்தானில் இருந்து திருமங்கலத்திற்கு இயக்கப்படுகிறது. இவ்விரு பேருந்துகளும் சோழவந்தான்- வாடிப்பட்டி சாலையில் ரயில்வே மேம்பால பணிகள் நடந்ததால் சில ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டது.

ஆனால் தற்போது ரயில்வே பால பணிகள் முடிந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வழித்தடத்தில் போக்குவரத்து துவங்கி விட்டது. ஆனால் ரத்து செய்யப்பட்ட இந்த பேருந்துகள் மட்டும் மீண்டும் இயக்கப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால் மாணவ, மாணவிகள் உரிய நேரத்திற்கு சென்று வர இயலாமல் தினமும் பரிதவித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம்செக்கானூரணி அரசு பணிமணை மூலம் இயக்க வேண்டிய வாடிப்பட்டி- பல்கலைக்கழகம் பேருந்தையும், சோழவந்தான் பணிமனை மூலம் இயக்க வேண்டிய வாடிப்பட்டி- திருமங்கலம் பேருந்தையும் மீண்டும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அலங்காநல்லூரில் இருந்து வாடிப்பட்டி, சோழவந்தான், செக்கானூரணி வழியாக உசிலம்பட்டி சென்ற ஒரு தனியார் பேருந்தும் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டது. அதையும் மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு கூறினர்.