சமயநல்லூர் அருகே ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து தருவதாக ரூ.35 ஆயிரம் அபேஸ்: மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலை
வாடிப்பட்டி, ஜூன் 26: சமயநல்லூர் அருகே ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவதுபோல் நடித்து ஓய்வு ரயில்வே ஊழியரின் வங்கி கணக்கில் ரூ.35 ஆயிரத்தை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை, போலீசார் தேடி வருகின்றனர். சமயநல்லூர் வளன் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (62). ரயில்வே துறையில் கார்டு வேலை பார்த்து ஓய்வு பெற்ற இவர், ஊர்மெச்சிகுளம் பிரிவில் செயல்பட்டு வரும் ஏடிஎம் மையத்தில் நேற்று பணம் எடுக்க சென்றுள்ளார். அங்குள்ள ஏடிஏம் இயந்திரத்தில் அவர் தனது கார்டை செலுத்தியபோது பணம் வரவில்லை இதனையெடுத்து வெளியே வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரவிச்சந்திரனை வழிமறித்து பேசி ஏடிஏம்மில் தான் பணம் எடுத்து தறுவதாக கூறி, அவரது கார்டை வாங்கியுள்ளார்.
பின்பு ரகசிய எண் கேட்டு தெரிந்து கொண்ட அந்த நபர், மெஷினில் பணம் வரவில்லை என்று கூறி நடித்துள்ளார். மேலும் தன்னிடமிருந்த போலி ஏடிஏம் கார்டை ரவிச்சந்திரனிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்.பிறகு அவரது கார்டை பயன்படுத்தி வங்கிக் கணக்கில் இருந்த ரூ.35,900ஐ எடுத்துக்கொண்டு தப்பினார். தனது செல்போனுக்கு வந்த குறுந்தகவலை பார்த்து அதிர்ச்சியடைந்த ரவிசந்ந்திரன், இந்த மோசடி குறித்து சமயநல்லூர் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.


