Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு

மதுரை, ஜூன். 24: மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்ப படிவங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது என, வேலை வாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், தங்களது கல்வித் தகுதியினைப் பதிவு செய்து விட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதோர், தேர்ச்சி பெற்றோர், மேல்நிலைக் கல்வி தேர்ச்சி மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி போன்ற கல்வித் தகுதியினைப் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவுற்று தொடர்ந்து புதுப்பித்து வருபவர்கள், உதவித்தொகை பெறலாம். மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை பதிவு செய்து ஓராண்டு பூர்த்தி அடைந்திருத்தால் போதும். இத்தொகை பெற ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45 வயதிற்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72,000 ஆகும். தமிழகத்திலேயே கல்வி முடித்தவர்களாகவும், வேறு பணிகளிம் ஈடுபடாதவர்களாகவும் இருக்க வேண்டும். இவர்கள் அரசு சார்ந்த வேறு நிதி உதவிகள் பெறுபவராக இருக்கக்கூடாது. பள்ளி, கல்லூரியில் தற்போது படிப்பவராக இருக்கக்கூடாது.

விண்ணப்ப படிவங்களை https://tnvelaivaaippu.gov.in அல்லது www.tnvelaivaaippu.gov.in ஆகிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து நிரப்பி வழங்கலாம். இதில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதோருக்கு மாதந்தோறும் ரூ.200ம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.400 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600, உதவித்தொகையாக அந்தந்த காலாண்டின் முடிவில் பயனாளியின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும்.

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600ம், மேல்நிலைக் கல்வி முடித்தோருக்கு மாதம் ரூ.750ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000ம் உதவித் தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்றுவருவோர், சுய உறுதிமொழி ஆவணத்தை உரிய ஆவணங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த உதவித்தொகை 3 ஆண்டுகள் மட்டுமே வழங்கப்படும். உதவித்தொகை பெறுவோருக்கு கிடைக்கும் அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்புகளுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாது. கூடுதல் தகவல்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.