Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தென் மாவட்டங்களில் ஆபரேஷன் ஷீல்டு நடவடிக்கை 687 கஞ்சா குற்றவாளிகள் கைது: தென்மண்டல போலீஸ் ஐஜி தகவல்

மதுரை: மதுரை உள்பட தென் மாவட்டங்களில் போலீசார் தரப்பில் அதிரடியாக மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் ஷீல்டு நடவடிக்கை வாயிலாக, கஞ்சா, புகையிலை விற்பனையில் ஈடுபட்ட 687 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருப்பதாக, தென் மண்டல காவல்துறை ஐஜி விஜயேந்திர பிதாரி தெரவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தென் மண்டல காவல்துறை எல்கைக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த மே 20ம் தேதி முதல் ஆபரேசன் ஷீல்டு நடவடிக்கை அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தென் மண்டல காவல்துறைக்கு உட்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் இந்த நடவடிக்கை தீவிரமாக நடைபெற்றது. இதன்படி பல்வேறு குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருக்கும் 2 அயிரத்து 441 பேருக்கு பிடி வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 694 பேரின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டன. 497 வழக்குகளில் 687 கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனை போன்றவற்றில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா புகையிலை விற்பனை செய்த வழக்குகளில் சிக்கியவர்களிடம் இருந்து, 401 கிலோ கஞ்சா மற்றும் 4 ஆயிரத்து 458 கிலோ சட்ட விரோத புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தென் மாவட்டங்களில் பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்டது தொடர்பாக, 55 ஆயிரத்து 336 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ள 365 பேரிடம் நன்னடத்தைக்கான பிணைப்பத்திரம் பெறப்பட்டுள்ளது.இதன்படி தென் மண்டலத்தில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.