Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலம் பகுதியில் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது? ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை, ஜூலை 23: வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலம் பகுதியில் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் ஊராட்சி சுங்கக் கட்டணம் வசூலிக்கிறது என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தென்காசி கடையம் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

பழைய குற்றாலம் அருவி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் 140 ஆண்டுகளுக்கும் மேலாக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காப்புக் காடு பகுதியாகும். அருவிக்குச் செல்லும் அணுகுசாலை நெடுஞ்சாலைத் துறையாலும், வாகன நிறுத்துமிடம் வருவாய்த்துறை நிலத்திலும் அமைந்துள்ளன. வனத்துறையிடம் எந்தவித அனுமதியும் பெறாமல், ஆயிரப்பேரி ஊராட்சி சார்பில் தன்னிச்சையாகச் சோதனைச் சாவடி அமைத்து கட்டணம் வசூலித்து வருகிறது. இது சட்ட விரோதம்.

இதுதொடர்பான டெண்டர் அறிவிப்பில், விண்ணப்பிக்க வெறும் 7 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்திற்கு முறையான விளம்பரம் செய்யப்படவில்லை. ஆயிரப்பேரி ஊராட்சி மன்றத் தலைவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, விதிமுறைகளை மீறி தனது உறவினருக்கு ஏலத்தை உறுதி செய்துள்ளார். உள்ளூர் கிராம மக்களிடமும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஆயிரப்பேரி ஊராட்சி மன்றம் நடத்திய ஏல நடைமுறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வழக்கு நிலுவையில் இருக்கும் வரை வாகன கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி தண்டபாணி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் ஏ.கண்ணன் ஆஜராகி, ‘‘மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறை வசமுள்ள பகுதியில் நுழைவு கட்டணமும், வனத்துறை பகுதியில் கார் பார்க்கிங் கட்டணமும் ஊராட்சி சார்பில் வசூலிக்கப்படுகிறது. இது சட்டவிரோதம்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலை, வனப்பகுதியில் அமைந்துள்ள வாகன நிறுத்துமிடத்திற்கு, ஊராட்சி மன்றம் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறது? நமக்கு மலைகளையும், மழையையும், அருவிகளையும் இயற்கை வழங்கியுள்ளது.

இயற்கை வழங்கிய இந்த வளங்களை பொதுமக்கள் அனுபவிக்கக் கூட ஏன் இத்தனை சுங்கக் கட்டணங்களை செலுத்த வேண்டும்? இது பொதுமக்களிடமிருந்து தண்டல் வசூலிப்பதைப் போல் உள்ளது. இதுதொடர்பாக தென்காசி கலெக்டர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை வரும் 29ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.