மதுரை வைகையாற்றங்கரை உட்பட நீர்நிலைகளில் மருத்துவக்கழிவு கொட்டும் நிறுவனம் மீது நடவடிக்கை கோரி வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை, ஆக. 20: வைகை ஆற்றங்கரையில் மருத்துவ கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை கோரிய வழக்கில், கலெக்டர், தாசில்தார் மூலம் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த மருத்துவர் சர்மேஷ் கான், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டத்தில் மட்டும் நாளொன்றுக்கு சராசரியாக 4.5 டன் மருத்துவக்கழிவுகள் உருவாவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. உயிரி மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதிகளின்படி கழிவுகளை முறையாகப் பிரித்தெடுத்தல், சேகரித்தல், கொண்டு செல்லுதல் மற்றும் பாதுகாப்பான முறையில் அழித்தல் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இந்த விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை.
மதுரையில் வைகை ஆற்றங்கரைகள், திறந்தவெளிகளில் ஊசிகள், ரத்தக்கறை படிந்த பஞ்சுகள் மற்றும் காலாவதியான மருந்துகள் உள்ளிட்ட ஆபத்தான மருத்துவக்கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப்படுகின்றன. இதனால் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மாநிலம் முழுவதும், குறிப்பாக தென்மாவட்டங்களில் மருத்துவக்கழிவுகள் மேலாண்மை விதிகளை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு மையங்களை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். கழிவுகளை அறிவியல்ரீதியாக பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். விதி மீறி ஆற்றங்கரை மற்றும் திறந்தவெளிகளில் கழிவுகளைக் கொட்டும் நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன் நேற்று விசாரணை வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குருபிரியா, ‘‘மருத்துவக்கழிவுகளை சேகரித்து பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்கள், மருத்துவக்கழிவுகளை பாதுகாப்பற்ற முறையில் ஆற்றங்கரையில் கொட்டி செல்கின்றன. இதனால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள் இந்த விவகாரம் கடுமையான சுகாதாரக்கேடுகளை உருவாக்குவதால், மிகவும் தீவிரமான மற்றும் கவலைக்குரிய விஷயமாகும். மதுரை கலெக்டர் சம்பந்தப்பட்ட தாசில்தார் மூலம் நேரில் ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்.15ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.



