Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அடிச்சு கொல்ல போலீசுக்கு ரூல்ஸ் தந்தது யாரு? நீதி கிடைக்கும்வரை 6 மாசமானாலும் கணவரின் உடலை வாங்க மாட்டேன்: பூசாரி மனைவி ஆவேசம்

மதுரை, ஆக. 20: நீதி கிடைக்கிறவரைக்கும் ஒரு மாசமோ, ஆறு மாசமோ என் புருஷன் உடலை வாங்கவே மாட்டேன் என போலீஸார் தாக்கி உயிரிழந்த பூசாரி மனைவி தெரிவித்தார். மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்த பூசாரி பரமசிவம்(55). வாகனம் நிறுத்துவது தொடர்பாக பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்தையா, மாலதி தம்பதியினருடன், பரமசிவம் குடும்பத்தினருக்கு மோதல் ஏற்பட்டு சிந்தாமணி போலீசார் விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில் பூசாரி பரமசிவத்தை, போலீசார் பூட்ஸ் காலால் தாக்கியும், பலமாக அடித்ததாலும் உடல்நலம் பாதித்து இறந்ததாக அவரது மனைவி அய்யம்மாள் மற்றும் உறவினர்கள் கூறி வருகின்றனர்.

மதுரை அரசு மருத்துவமனை பிணவறையில் உள்ள பரமசிவத்தின் உடலை, ஐகோர்ட் கிளை உத்தரவில், மாஜிஸ்திரேட் முன்னிலையில் 3 மூத்த டாக்டர்கள், வீடியோ பதிவுடன் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்தனர். அதன்பின்னர் உடலை வாங்க பரமசிவத்தின் மனைவி அய்யம்மாள், மகன் பிரபு மறுத்து விட்டனர்.

இதுகுறித்து பரமசிவம் மனைவி அய்யம்மாள் கூறியதாவது: ஒரு புகார்னா இரு தரப்பையும் கூப்பிட்டு விசாரிக்கணும். பெட்டிசன் கொடுக்க வா, விசாரணைக்கு வான்னு கூப்பிட்டு, பத்தே நாள்ல சாகுற அளவுக்கு அடிச்சு துன்புறுத்துன இவங்கள்லாம் போலீசா? இவங்களோட காக்கிச்சட்டைகளை கழற்றும் வரைக்கும் நான் ஓயமாட்டேன். அடிச்சு சாகடிச்ச அத்தனை போலீஸ், எங்களை வந்து பார்த்து பேசுனவங்க, பக்கத்து வீட்டு புருஷன், பொண்டாட்டி எல்லோர் பெயரையும் சொல்லி, எல்லா டாக்குமென்டையும் கோர்ட்ல ஒப்படைச்சிருக்கேன்.

என் புருஷன் சாவுக்கு நீதி கிடைக்கிற வரைக்கும் பத்துநாளோ, ஒருமாசமோ, நாலு மாசமோ, ஆறு மாசமோ நான் அவரு உடலை வாங்கவே மாட்டேன். நீதி கிடைக்கணும். அவர் ஒரு சிவ பக்தர். அவருக்கே இந்த நிலைன்னா, சாதாரணமானவங்களுக்கு போலீஸ்ல என்ன நிலைமை இருக்கும்? ஆடு, மாடு போல அடிச்சு கொல்ல, போலீசுக்கு யாரு ரூல்ஸ் கொடுத்திருக்காங்க. காக்கி சட்டை போட்டா நீ என்ன வேணுன்னாலும் செய்வியா? கொல்லுற அளவிற்கு போலீசுக்கு தைரியத்தை கொடுத்தது யாரு? போலீஸ் அடிச்சு சாகடிச்ச என் புருஷன் சாவுதான் தமிழ்நாட்டுக்கே கடைசி லாக்கப் சாவாக இருக்கணும்.

சபரிமலை போயி 3 நாளு கோயில்ல இருந்துட்டு வந்தவரை, ஏற்கனவே பெட்டிசன் கொடுத்தும், திரும்பவும் பெட்டிசன் கொடுன்னு கூப்பிட்டாங்க. நான்தான் கூட்டிட்டு போனேன். போலீசு நாலஞ்ச பேரு சேர்ந்து அடிக்கிறத எல்லோருந்தானே பார்த்தாங்க? காசை வாங்கிட்டு என் புருஷனை கொன்னுருக்கீங்க அதானே? எனக்கு பதில் சொல்றவரை, நீதி கிடைக்கிறவரை உடலை வாங்க மாட்டேன். எனக்கு காசு பணமோ, நிதியோ வேணாம். புருஷனை வச்சு பேரம் பேசுறவ இல்ல நான். நீதிதான் வேணும்.

போலீஸ் பொய்யான அறிக்கை கொடுத்து திசை திருப்ப பார்க்குது. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் இன்னும் வரல. போலீஸ் ஸ்டேசன்ல இருந்த கேமராவை கழட்டிட்டாங்க. ஸ்டேஷனுக்கு அவரை நல்லா நடக்குற மாதிரி கூட்டிட்டு போனேன். அங்கேயிருந்து அவங்க இன்ஸ்பெக்டர் வண்டில போட்டுத்தான் கூட்டிட்டு போனாங்க. எல்லா ஆதாரங்களுமே இருக்கு. ரோட்டுல கேமராக்கள் இருக்கு... போலீஸ் அடிச்ச அன்றைக்கே நம்பர் நூறுக்கு, சிஐடிக்கு புருஷன் பேசியிருக்காரு. போலீஸ் அடித்ததை வீடியோவும் பேசி பதிவு பண்ணி இருக்காரு.

எல்லாத்தையும் கோர்ட்ல ஒப்படைச்சுட்டேன், நாங்களே பொய் சொன்னாலும், வாக்குமூலங்களும், ஆதாரங்களும் உண்மையத்தானே காட்டும். கண்ணுமுன்னாடி கட்டுன புருஷன் போலீஸ்காரங்களால அடிவாங்குற கொடுமையை பார்த்து துடிச்சுப் போயிட்டேன். அந்த தவிப்பை அவங்களும் அனுபவிக்கணும். நீதி கிடைக்கிற வரைக்கும் நான் விடப்போறதில்லை. இவ்வாறு தெரிவித்தார்.