Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

அழகர்கோவில் ஆடி தேரோட்ட விழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்: ஜூலை 29ல் திருத்தேரோட்டம்

மதுரை, ஜூலை 20: மதுரை அழகர்கோவில் ஆடி தேரோட்ட விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வரும் ஜூலை 29ம் தேதி நடைபெற உள்ளது. திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்றும், 108 வைணவ தேசங்களில் ஒன்றானதும், பிரசித்தி பெற்றதுமான மதுரை அழகர்கோவிலில் உள்ளது சுந்தரராஜ பெருமாள் கோயில். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழாவிற்கு இணையாக ஆடி மாதம் நடைபெறும் ஆடி பெருந்திருவிழாவும் தனி சிறப்புடையது. அந்த வகையில் இந்தாண்டுக்கான ஆடி பெருந்திருவிழா ஜூலை 21ம் தேதி (நாளை) செவ்வாய் கிழமை காலை 8.15 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் மங்கள இசையுடன் ேகாயில் கொடிமரத்தில் கொடியேற்ற விழாவுடன் துவங்குகிறது.

தொடர்ந்து அன்றிரவு அன்ன வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள் புறப்பாடு நடைபெற உள்ளது. மறுநாள் ஜூலை 22ம் தேதி காலையில் தங்கப்பல்லக்கு, அன்றிரவு சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. ஜூலை 23ம் தேதி காலையில் சுவாமி புறப்பாடு, அன்றிரவு அனுமார் வாகனத்திலும், ஜூலை 24ம் தேதி இரவு கருட வாகனத்திலும், ஜூலை 25ம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 8.10 மணிக்குள் சுந்தரராஜ பெருமாள் தங்க பல்லக்கிலும் புறப்பாடாகி மதுரை சாலையில் உள்ள சுந்தரராஜன் பட்டியில் அமைந்துள்ள மறவர் மண்டபத்திற்கு சென்று எழுந்தருளுகிறார். அங்கு பெருமாளுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெறும்.

பின்னர் மாலையில் திரும்பி வரும் நிகழ்வும், அன்றிரவு சேஷ வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெற உள்ளது. ஜூலை 26ம் தேதி இரவு யானை வாகனத்திலும், ஜூலை 27ம் தேதி இரவு புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெற உள்ளது. ஜூலை 28ம் தேதி இரவு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருத்தேரோட்ட திருவிழா வரும் ஜூலை 29ம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது. அன்று காலையில் தேருக்கு சுந்தரராஜ பெருமாள், தேவியர்களுடன் எழுந்தருளல் நடைபெறும். பின்னர் காலை 7.05 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.

அன்றிரவு புஷ்ப பல்லக்கும், மறுநாள் ஜூலை 30ம் தேதி உற்சவ சாந்தியுடன் ஆடி பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் ஹரிஹரன் தலைமையில், உள்துறை கண்காணிப்பாளர் ரம்யா சுபாஷினி மற்றும் கோயில் அதிகாரிகள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.