மேலூரில் குறைதீர் கூட்டம்; விவசாய கடன் தள்ளுபடி பெரும் ஏமாற்றம் தருகிறது: விவசாயிகள் சங்க தலைவர் கருத்து
மேலூர், ஆக. 19: மேலூரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கத்தலைவர், தமிழக அரசு சார்பில் முதல்வரின் விவசாய கடன்தள்ளுபடி அறிவிப்பு பெரும் ஏமாற்றம் தருவதாக கூறினார். மேலூர் தாலுகா அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாசில்தார் பிரேம் கிஷோர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம், பென்னிகுயிக் பாசன விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்களின் சார்பில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பொதுப்பணித் துறை, வேளாண், தோட்டக்கலைத் துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நீர்நிலைக்கள் ஆக்கிரமிப்பு, பாசன கால்வாய் பராமரிப்பு, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் விவசாயிகள் சார்பில் முன்வைக்கப்பட்டன. தற்போது எல்நினோ பாதிப்பு குறித்து தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் எப்போதும் இல்லாத வறட்சி ஏற்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் பெரியாறு பாசன பகுதிகளிலும் இது குறித்த வெளிப்படையான அறிவிப்பை அரசு மற்றும் அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். விவசாயிகளை பாதுகாக்க எந்த அதிகாரிகளும் நினைப்பதில்லை. குறிப்பாக நீர்நிலைகள், நீர்வரத்து பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில்லை. பொதுப்பணித் துறை சார்பில் நீர்வரத்து மற்றும் பாசன கால்வாய்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போது, அது குறித்த அறிவிப்பு பதாகைகளை அனைவரும் அறியும் வகையில் அமைக்க வேண்டும். அவற்றை பராமரிக்க அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தினர்.
முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்க தலைவர் முருகன் கூறியதாவது: தாசில்தார் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வழங்கப்படும் மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்படுவதில்லை. மேலூர் பகுதிகளில் உள்ள நீர்வரத்து கால்வாய்களை பராமரிப்பு செய்வதற்கு அரசுக்கு அதிகாரிகள் தவறான தகவல்களை வழங்குவதால் குறைந்த நிதியே ஒதுக்கப்பட்டு வருகிறது. முழுமையாக பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். எல் நினோ காரணமாக 150 வருடத்திற்கு பிறகு கடுமையான வறட்சி ஏற்படும் என கூறப்படும் நிலையில், இது குறித்து அச்சத்தை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சையைப் போன்று மற்ற மாவட்ட விவசாயிகளுக்கும் அரசு உரிய நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் நேற்று முன்தினம் தமிழக முதல்வர் விவசாய கடன் தள்ளுபடி குறித்து அறிவிக்கப்பட்டது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அரசு அதிகாரிகள், அமைச்சர் மற்றும் முதல்வரிடம் தவறான தகவல்களை வழங்கி வருகின்றனர். கடந்த 5 வருடமாக விவசாயிகளின் கடன் அதிகரித்துள்ள நிலையில் குறைந்த பட்சம் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.



