மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாத்தையாறு கால்வாயில் கொட்டப்படும் குப்பைகள்: வெள்ள அபாயத்துடன், துர்நாற்றம், கொசுக்கள் தாராளம்
மதுரை, ஆக. 19: மதுரை அலங்காநல்லூர் பகுதியின் சாத்தையாறு அணையிலிருந்து, கால்வாய் பிரிந்து ஓடையாக மதுரை வண்டியூர் பூங்கா வரை செல்கிறது. மழை நாட்களில் இந்த கால்வாய் ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஆக்கிரமிப்புகளாலும், கால்வாயில் கொட்டும் குப்பைகள், கழிவுகளாலும் தண்ணீர் ஓட்டம் தடைபட்டு, அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த காலங்களில் முன்னதாகவே கால்வாய் தூர் வாரி சீரமைக்கப்பட்டது.
இதற்கிடையில் சாத்தையாறு அணை துவங்கி, வண்டியூர் கண்மாய் வரையிலான கால்வாய் பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் பெருவாரியான இடங்களில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுகிறது. இதன் உச்சக்கட்டமாக மதுரை மாட்டுத்தாவணி அருகே சாத்தையாறு கால்வாயில் சமீபகாலமாக பெருமளவில் குப்பைகளை கொட்டிச் செல்கின்றனர். இப்பகுதியில் குடியிருப்போருடன், மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள கடைகளின் சேரும் பாலித்தீன் கழிவுகளும், குறிப்பாக உணவகங்கள் உள்ளிட்டவைகளில் இருந்து உணவுக்கழிவுகளும், மீன், கோழி கழிவுகளும் அதிகளவில் கொட்டப்படுகிறது.
இதற்கெல்லாம் மேலாக பல நேரங்களில் மாநகராட்சியினர் ஆங்காங்கே சேகரிக்கும் குப்பைகளையும் இந்த கால்வாய் ஓரத்தில் கொட்டிச் செல்கின்றனர். இது அப்படியே காற்றில் பறந்து கால்வாய் ஓடைக்குள் சிதறி கிடக்கிறது. இதனால், ஓடை கழிவுகளால் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இங்குள்ள டிஎம்நகர் பகுதியை சேர்ந்த கணேசன் கூறும்போது, ‘மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் ஸ்டாண்டை ஒட்டியுள்ள சாத்தையாறு கால்வாயில் பெருமளவில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் எந்நேரமும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்களும் பெருகி வருவதால் நோய் பிறக்கும் மையமாக மாறியுள்ளது. சமீபமாக மாநகராட்சியினரே குப்பையை கொட்டிச் செல்வதால் வரும் மழை காலத்தில் குப்பைக் கழிவுகள் நீரோட்டத்தை அடைத்து, குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. பெரும் வெள்ளப்பாதிப்பை எதிர்நோக்கி அச்சத்துடன் காத்திருக்கும் எங்களை காக்க, முன்னெச்சரிக்கையாக மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் இந்த கால்வாய் ஓடையை தூர் வாரி, அடைத்துக் கிடக்கும் குப்பைகளை முழுமையாக அகற்றி, குப்பை, கழிவுகள் கொட்டுவதை முழுமையாக தடுக்க வேண்டும்’ என்றார்.
ரூ.76.16 கோடியில் வைகை ஆறு மேம்பாட்டு திட்டம்
மதுரையின் அடையாளமான வைகை ஆற்றில், கழிவுநீர் கலப்பது, சீமைக்கருவேல் உள்ளிட்ட மரங்கள் வளர்வது, கரைப்பகுதிகள் சிதைவடைவதென வைகை பெரும் பாதிப்பிற்கு ஆளாகி வருகிறது. கடந்த பிப்ரவரியில் திமுக அரசு ரூ.76 கோடியில் வைகை ஆற்றை மேம்படுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் தந்து, மாநகராட்சி எல்லைக்குள் கோச்சடை முதல் விரகனூர் அணை வரை ஆற்றின் இருபுற கரைகள் அழகுபடுத்த திட்டமிட்டது.
இந்நிலையில் இத்திட்டம் ரூ.76.16 கோடிக்கு தற்போது திருத்தப்பட்ட டெண்டர் வெளியிட்டு பணிகள் துவக்கப்பட இருக்கிறது. கழிவுநீரை தடுத்து, களைச்செடிகள் அகற்றி, சிதைந்த கரைகளை சரி செய்து, கரைகளில் பூர்வீக மரங்கள் வளர்ப்பதென பணிகள் நடக்கிறது. நடைபாதைகள், குழந்தைகள் பூங்காக்கள், கலாசார காட்சிக் கூடங்களுடன், படித்துறைகள், மின் விளக்குகள், ஆற்றில் மிதந்து வரும் குப்பைகளை தடுத்திட முதன்முறையாக தண்ணீர் குறுக்கே ‘டிராஷ் பூம்’ மிதக்கும் வலைத்தடுப்பு ஏற்படுத்துவதனெ பணிகள் நடத்தப்பட இருக்கிறது.
இத்திட்டத்திற்கென மாநகராட்சி கமிஷனர் கவுரவ்குமார் வைகை வடகரை, தென்கரை பகுதிகளை நேற்று அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வைகை ஆற்றை மேம்படுத்தும் இத்திட்டத்தின் கீழ் வைகை வடகரைப் பகுதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் பகுதியில் பார்வையாளர்கள் அமர்ந்து காண்பதற்கான 2 கேலரிகள், மற்றும் சிறிய அளவிலான நடைபாதை பூங்காக்கள் அமைத்தல், ஓபுளா படித்துறை அருகில் 3 இடங்களிலும், தேனூர் மண்டபம் அருகிலும், நடைபாதை பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தென்கரைப் பகுதியில் கோச்சடையில் 9 ஏக்கர் பரப்பில் ஆற்றின் கரையில் தடுப்புச்சுவர் கட்டி அழகிய பூங்கா அமைக்கப்படுகிறது. மேலும், ஆற்றின் இரு கரைகளிலும் நவீன மின்விளக்குகள், பாதுகாப்பு மேற்பார்வைக்கென ஆங்காங்கே நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. இதைத்தொடர்ந்து இவ்விடங்களை கமிஷனர் பார்வையிட்டு, மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் தொடர்பாக அலுவலர்களிடம் விளக்கம் கேட்டறிந்தார். மாநகராட்சி அதிகாரிகள் உடன் சென்றனர்.



