பேரையூர், ஆக. 18: பேரையூரில் பல மாதங்களாக பூட்டி கிடக்கும் சமுதாய கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேரையூர் பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாயக்கூடம் வத்திராயிருப்பு சாலை மின்சார வாரிய அலுவலகம் அருகில் அமைந்துள்ளது. இங்கு பேரூராட்சிக்குட்பட்ட ஏழை, எளிய மக்கள் தங்களின் சிறு, சிறு இல்ல விழாக்களை குறைந்த வாடகை கட்டணம் செலுத்தி நடத்தி வந்தனர். இதற்கிடையே இங்கு உசிலம்பட்டி மாவட்ட உரிமையியல் நடுவர் நீதிமன்றத்திலிருந்து பேரையூர் பகுதிக்கு பிரிக்கப்பட்ட மாவட்ட உரிமையியல் நடுவர் நீதிமன்றம் இயங்குவதாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.
அதன்பின் இப்பகுதி ஏழை, எளிய மக்கள் தங்கள் இல்ல விழாக்களை அதிக செலவில் தனியார் மண்டபங்களில் நடத்தும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் பேரையூர் மாவட்ட உரிமையியல் நடுவர் நீதிமன்றத்திற்கு ரூ.16 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் சாப்டூர் சாலையில் கட்டப்பட்டது. இதையடுத்து சமுதாயக்கூடத்தில் செயல்பட்டு வந்த மாவட்ட உரிமையியல் நடுவர் நீதிமன்றம் இங்கிருந்து பல மாதங்களுக்கு முன்பே புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.



