Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் ஆன்லைன் முறையால் பொதுமக்கள் அவதி: 2 மணிநேரத்திற்கும் மேலானதால் வாக்குவாதம்

மதுரை, ஜூன் 16: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். இதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களின் விபரங்களை கையால் எழுதி அதற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் நடைமுறை இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று முதல் கலெக்டர் ஆகாஷின் உத்தரவின் பேரில் ஆன்லைன் மூலமாக ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டது. இதற்காக மனுக்களின் விபரங்களை ஆன்லைன் மூலமாக கணினியில் பதிவேற்றிய பின்னர், கணினி அடையாள எண்ணுடன் கூடிய ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் ஒப்புகை சீட்டுடன் தங்களது மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் வழங்கலாம் எனவும் கூறப்பட்டது.

ஆன்லைன் மூலமாக மனு ரசீது வழங்கும் நடைமுறை நேற்று முதல் துவங்கியதால், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. கணினி நடைமுறைக்கு ஏற்ப பயிற்சி பெற்ற பணியாளர்கள் ேபாதுமான அளவிற்கு இல்லாத நிலையில், 2 மணி நேரத்திற்கும் மேலாக மனு அளிக்க வந்தவர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அதேநேரம் மக்களின் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பல்வேறு துறை அதிகாரிகள் அலட்சியத்துடன் தங்களது செல்போன்களில் சமூக வலைதளங்களில் மூழ்கி இருந்தது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. நீண்ட நேரம் காத்திருந்ததால் ஒரு சிலர் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.