மதுரை, ஆக.14: மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் வலம் வரும் தெருநாய்கள் நடந்தும், வாகனங்களிலும் செல்வோரை விரட்டிப்பிடித்து கடித்துக்குதறி வருகிறது. ஒரே நாளில் 10 பேரை கடித்துக் குதறியதுடன், அன்றாடம் இப்பகுதிகளில் இருந்து நாய்கள் கடித்து மதுரை அரசு மருத்துவமனைக்கு பலரும் சிகிச்சைக்கு வந்து செல்வது வாடிக்கையான சம்பவமாகி வருகிறது. மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ரோட்டோர மற்றும் சிறிய, பெரிய உணவகங்கள் ஏராளமாக உள்ளன. இங்கிருந்து கொட்டப்படும் உணவுக் கழிவுகளையும், இப்பகுதியின் மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட் பகுதிகளில் கொட்டும் கழிவுகள், இப்பகுதிகளின் ரோட்டோர குப்பைகளையும் தேடி ஏராளமான தெருநாய்கள் படையெடுக்கின்றன.
இதுதவிர, மாட்டுத்தாவணி பகுதியை சுற்றிலும் லேக் வியூ குடியிருப்பு, கோர்ட் ஊழியர் குடியிருப்பு, செய்தியாளர் காலனி, தொழிற்பேட்டை, வண்டியூர் பூங்கா சாலை உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் பெருகி காணும் இடமெல்லாம் சுற்றித் திரிகின்றன. இப்பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் நடந்தும், வாகனங்களிலும் தினமும் வந்து செல்கின்றனர். அதிகாலை மற்றும் இரவில் இந்த தெருநாய்கள் அனைவரையும் விரட்டிக் கடிக்கின்றன. டூவீலர்களில் செல்வோரை துரத்தும்போது, நிலை குழைந்து அவர்கள் அதிவேகத்தில் சென்று மோதி கீழே விழுந்தும் விபத்திற்கு ஆளாகி காயமடைகின்றனர். அத்துடன் விரட்டும் தெருநாய்களால் நாய் கடிக்கும் ஆளாகின்றனர்.
நாய் கடித்து மதுரை அரசு மருத்துவமனைக்கு தினமும் சிகிச்சைக்கு வருவோரில் கட்டாயம் மதுரை மாட்டுத்தாவணி பகுதியைச் சேர்ந்தவர்கள் இடம்பிடிக்கின்றனர். நேற்று முன்தினம் ஒரேநாளில் மட்டுமே கருப்பு, செவலையென இரு நாய்கள் மட்டுமே வெறி கொண்டதைப்போல ரோட்டில் சென்றவர்களை எல்லாம் விரட்டி விரட்டிக் கடித்ததில் 10 பேர் வரை நாய்கடிக்கு ஆளாகி மதுரை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் ஊசி செலுத்தி, காயங்களுக்கு சிகிச்சை வழங்கினர்.
நாய்க்கடிக்கான சிகிச்சை பிரிவு அரசு டாக்டர்கள் கூறும்போது, ‘நகர், புறநகரிலிருந்து தினமும் 40க்கும் மேற்பட்டோர் நாய்கடித்து வருகின்றனர். இதில் மாட்டுத்தாவணி பகுதியில் கடிபட்டவர்கள் கட்டாயம் இடம்பெறுகின்றனர். நாய் கடித்தவர்கள் மிதமாக இருந்து விடாமல் உரிய சிகிச்சை உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அரசு மைய மருத்துவமனையில் 24 மணி நேரமும் சிகிச்சை பிரிவு இயங்குகிறது. ரேபிஸ் பாதித்தால் அதன் தீவிரம் கொடுமையானது’ என்றனர்.
மாட்டுத்தாவணி பகுதி குடியிருப்போர் கூறும்போது, ‘குடியிருப்பு பகுதியில் வெறியுடன் நாய்கள் சுற்றித்திரிகிறது. டூவீலர்களை வெளியில் நிறுத்த முடியவில்லை. அதன் இருக்கைகளை கடித்துக் குதறுகின்றன. இதுவரை 30க்கும் அதிகமான வீடுகளில் வாசலில் நிறுத்தியிருந்த டூவீலர்களின் இருக்கைகள், பொருட்கள் நாய்களால் கடித்து குதறி வீணடிக்கப்பட்டுள்ளது. ஒருவரது வீட்டு வளர்ப்பு பூனையை பிடித்து கடித்து கொன்று விட்டன. ரோட்டில் நடப்பவர்களை, டூவீலரில் செல்வோரை விரட்டி விரட்டிக் கடித்து படுகாயப்படுத்தி வருகின்றன. கூட்டம் கூட்டமாக வலம் வரும் நாய்களை பிடித்து, முறையான தடுப்பூசி, கருத்தடை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இந்த தெருநாய்களை கட்டுப்படுத்தி, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ என்றனர்.



