மதுரை: செவிலியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், வரும் 17ம் தேதி அரசு வழங்கும் அறிவிப்பிற்கென காத்திருக்கின்றனர். பிரதானமாக பணி நிரவலுக்கான அரசாணையை ரத்து செய்வதுடன், மதுரை அரசு மருத்துவமனையின் செவிலியர்கள் பற்றாக்குறையை சரி செய்யவும் கோரிக்கை எழுந்துள்ளது. தொகுப்பூதிய முறையை முழுமையாக நிறுத்தி நிரந்தர பணியாளர்களை நியமிப்பதுடன் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கிராமங்களில் பணியாற்றும் செவிலியர்களை பணி நிரவலில் நகர்ப்புறத்தின் மருத்துவமனைகளுக்கு மாற்றும் 204 எண் ஆணையை ரத்து செய்ய வேண்டும். ஸ்டாப் நர்ஸ் என்பதை நர்ஸ் ஆபீசராக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.3ல் செவிலியர்கள் போராட்டம் துவக்கினர்.
இதன் தொடர்ச்சியாக மதுரை அரசு மருத்துவமனையிலும் கருப்பு பட்டை, கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தவர்கள், அடுத்த கட்டமாக காலை ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக தற்போது கோரிக்கை இமெயில் அனுப்பும் போராட்டத்தை செவிலியர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதன்படி முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை உயரதிகாரிகளுக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்தடுத்து மாநில அளவில் செவிலியர்கள் இமெயில் அனுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை செவிலியர்கள் கூறியதாவது: கோரிக்கைகளில் முக்கியமானதாக செவிலியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வருகிறோம். தற்போது மதுரை அரசு மருத்துவமனையின் பல்வேறு வார்டுகளிலும் 508 செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பொதுவாக சாதாரண வார்டுகளில் 6 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர், அவசர சிகிச்சை பிரிவில் 3 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் பணியில் இருந்தாக வேண்டும். ஆனால் மதுரை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் மட்டுமே 4 ஆயிரத்திற்கும் அதிகம் பேர் அன்றாடம் சிகிச்சை பெறுகின்றனர். இவ்வளவு அதிக நோயாளிகளுக்கு ஏற்ப, செவிலியர்கள் எண்ணிக்கை இல்லை. குறைந்தது ஆயிரம் செவிலியர்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில், 508 செவிலியர்களே உள்ளனர். இதிலும் சிலர் மாற்றுப்பணி, விடுமுறை உள்ளிட்ட காரணங்களால் போய்விட குறைந்த செவிலியர்களே கூடுதல் பணிச்சுமையில் தவித்து வருகிறோம்.
இதுதவிர பணி நிரவலில் செவிலியர்களை மாற்றும் 204 எண் ஆணையை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளின் பேரிலும் மாநில அளவிலும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதன்பேரில் வரும் 17ம் தேதி உரிய அறிவிப்புகளை வெளியிடுவதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நிர்வாகிகளிடம் உறுதியளித்துள்ளனர். இதன்படி அரசு சரியான முடிவுகளை அறிவிக்கா விட்டால், செவிலியர் சங்கங்களை ஒருங்கிணைத்து போராட்டங்கள் மேலும் தீவிரப்படுத்தப்படும்’ என்றனர்.




