Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மதுரையில் அதிகரித்து வரும் வெப்பத்தை குறைக்க பசுமை மதுரை திட்டம்

மதுரை: மதுரையில் அதிகரித்து வரும் வெப்பத்தை குறைக்க ஒருங்கிணைந்த பசுமை மதுரை செயல் திட்டத்தை உருவாக்கக் கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த மானகிரி செல்வகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

சர்வதேச ஆய்விதழின் ஆய்வறிக்கையில், உலகின் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 205 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், தீவிர வெப்ப ஆபத்து நிறைந்த நகரங்களின் பட்டியலில் மதுரை 7வது இடத்தில் உள்ளது. நகரமயமாக்கல், வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதும், போதிய மாற்று மரக்கன்றுகள் நடப்படாததுமே இந்த வெப்ப அதிகரிப்பிற்கு முக்கியக் காரணம். மதுரை மாநகரில் சுற்றுச்சூழலை மீட்கவும், நகர்ப்புற வெப்பத்தை குறைக்கவும் ஒருங்கிணைந்த பசுமை மதுரை செயல்திட்டத்தை உடனடியாக வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

வைகை ஆற்றின் இரு கரைகளிலும் உள்ளூர் வகை மரக்கன்றுகளை நட்டு, அதன் கரையோர சூழலியலை மீட்டெடுக்க வேண்டும். விரகனூர் - உத்தங்குடி - கப்பலூர் வெளிவட்டச்சாலை, கப்பலூர் - வாடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலை, மற்றும் வாடிப்பட்டி - சிட்டம்பட்டி சாலைகளில் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக பெருமளவில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களை வெப்ப அலையிலிருந்து பாதுகாக்க நிழல் நடைபாதைகள், குடிநீர் வசதிகள் மற்றும் குளிரூட்டும் மையங்களை அமைக்க வேண்டும். மதுரை கலெக்டர் தலைமையில், அனைத்துத் துறை அதிகாரிகள் மற்றும் அறிவியல் வல்லுநர்களை கொண்ட சிறப்புக் குழுவை அமைத்து மரங்கள் நடுவது மற்றும் பராமரிப்பை கண்காணிக்க வேண்டும். ஆண்டுதோறும் மரங்களை கணக்கெடுத்து, ஜிஐஎஸ் தொழில்நுட்பம் மூலம் அவற்றைப் பதிவேற்றம் செய்து பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர், மனுவிற்கு வனம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை முதன்மை செயலர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப். 8க்கு தள்ளி வைத்தனர்.