Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மேலூரில் ஆடி உற்சவ திருவிழா; 10 ஆயிரம் பக்தர்கள் பால்குட ஊர்வலம்

மேலூர், ஆக.12: மேலூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நாகம்மாள் திருக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கடைசி செவ்வாய்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் ஆடி உற்சவ திருவிழா நடைபெற்று வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான 62ம் ஆண்டு உற்சவ விழா கடந்த ஜூலை 10ல் யாகசாலை பூஜை மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியாக நேற்று காலை சக்தி கரகமும், அதனைத் தொடர்ந்து காப்பு கட்டி விரதம் மேற்கொண்ட மேலூர், மதுரை, சிவகங்கை, சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர்.

அவர்களை தொடர்ந்து அலகு குத்தியும், பறவைக்காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலூர் மண்கட்டி தெப்பக்குளத்தில் இருந்து தொடங்கிய இந்த பால்குட ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகளான அழகர்கோவில் ரோடு, நகைக்கடை பஜார், பெரியகடை வீதி, செக்கடி பஜார் வழியாக கோவிலை சென்றடைந்தது. பின்னர் பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்திய பால், நாகம்மாள் தேவிக்கு மின் மோட்டார் மூலம் தொடர்ந்து அபிஷேகம் செய்யப்பட்டது.பக்தர்கள் 1 அடி முதல் 30 அடி வரை நீளம் கொண்ட அலகு குத்தியும், பறவைக் காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்தது பக்தர்களை மெய்சிலிக்க வைத்தது.

இந்த பால்குட உற்சவ விழாவை முன்னிட்டு, மேலூர் டிஎஸ்பி சிவக்குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, 2ம் நாள் உற்சவ விழாவாக இன்று மாலை, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபடும் உற்சவமும், அம்மனின் புஷ்பரத ஊர்வலமும் நடைபெற உள்ளது.