கரடிக்கல் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிநீர் இல்லாததால் பயனாளிகள் குடியேற தயக்கம்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருமங்கலம், செப்.8: திருமங்கலத்தினை அடுத்த கரடிக்கல் கிராமத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டி கொடுக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிநீர் வசதியில்லாததால் பயனாளிகள் குடியேற தயங்கி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கரடிக்கல் கிராமத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுதிட்டத்தின் கீழ், ரூ.85.87 கோடி மதிப்பில் 864 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டன. இதில் பொதுமக்கள் குடியேற இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி ஒரு பயனாளி 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கட்டவேண்டும் எனவும், மின் இணைப்புக்கு தனியாக ரூ.7,500 தனியாவும், பராமரிப்பு செலவிற்கு என ஒவ்வொரு வீட்டின் பயனாளியும் நான்கு மாதங்களுக்கு ரூ.1000 எனவும் தொகை நிர்ணயம் செய்யப்பட்டு கட்டி அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்த அடுக்குமாடி வீடுகளுக்கு என குடியிருப்பு பகுதியிலேயே போர்வெல் அமைக்கப்பட்டு ஒவ்வொரு அபார்ட்மெண்டிற்கும் என தண்ணீர்தொட்டிகள் வைக்கப்பட்டன. இந்நிலையில் குடியிருப்பின் எந்த பகுதிக்கும் தண்ணீர் சரிவர வருவதில்லை. போர்வெல்லில் தண்ணீர் இல்லை. இதனால் 500க்கும் மேற்பட்டவர்கள், நான்கு மாதங்கள் ஆகியும் இன்று வரையில் தங்களது வீடுகளில் குடியேறவில்லை. 864 வீடுகள் உள்ள இந்த குடியிருப்பில் இதுவரையில் சுமார் 20 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். அவர்களும் தண்ணீர் பிரச்னையால் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். மினரல் வாட்டர் கொண்டு வரும் தண்ணீர் லாரிகளில் மூன்று நாள்களுக்கு ஒரு முறை ரூ.300 வரையில் பணம் கொடுத்து குடிநீரினை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து பலமுறை நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு திட்ட அதிகாரிகள், குடிசை மாற்றுவாரிய அதிகாரிகள், திருமங்கலம் பிடிஓ உள்ளிட்ட பலருக்கும் புகார் கொடுத்தும் பலன் எதுவும் இல்லை என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இந்த குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் மிகவும் குறைந்த பட்ச வெளிச்சத்தினைதான் இரவு வேளையில் தருவதால் பாம்பு, தேள் உள்ளிட் விஷஜந்துகள் நடமாட்டத்துடன் வசித்து வருவதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். சொந்த வீட்டு கனவுடன் பணம் கட்டி குடியேறி வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாமல் மிகவும் வேதனையுடன் வசித்து வருதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்னையில் உரிய நடவடிக்கைகளை எடுத்து நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரியத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குடிவந்த பொதுமக்களின் குடிநீர் தேவையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கவும், பால் காய்ச்சியும் தங்களது புதுவீடுகளில் தண்ணீர் பிரச்னையால் குடியேறாமல் இருப்பவர்களின் துயரத்தினையும் போக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

