Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாநகராட்சி வரிபாக்கி ரூ.3.26 கோடி வணிக கட்டிடங்களுக்கு பறிமுதல் நோட்டீஸ்

மதுரை, செப்.8: மதுரையில் ஒட்டல், திருமண மண்டபம் உள்ளிட்ட நான்கு வணிக கட்டிடங்களுக்கான வரிபாக்கி ரூ.3.26 கோடி தொகைக்கென இக்கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு, அசையாச் சொத்துகள் பறிமுதல் செய்வதற்கான அறிவிப்பு நோட்டீஸ் வழங்கி மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த அப்துல்நாசர், அபுதாகிர் ஆகியோரது வணிகக் கட்டிடத்திற்கு 2022ம் ஆண்டு முதல் வரி செலுத்தப்படவில்லை. நிலுவைத்தொகை ரூ.31,83,689 இருந்தது. இதேபோல், அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் பிரபாகரன் என்பவரது வணிக கட்டிடத்திற்கும், 2021 முதல் வரி செலுத்தப்படவில்லை. இதன் மொத்த நிலுவைத் தொகை ரூ.2,68,25,886 இருந்தது.

இத்துடன், ஜிஎஸ்டி ரோட்டில் பெரியசாமி என்பவரது திருமண மண்டபத்திற்கு 2021 முதல் வரி செலுத்தப்படவில்லை. இதன் மொத்த நிலுவைத் தொகை ரூ.16,90,456 இருக்கிறது. இதுதவிர, அவனியாபுரம் மெயின் ரோட்டில் பெரியசாமி, தாமோதர கண்ணன், விஜய ஆகியோரது பள்ளி கட்டிடத்திற்கும் 2021 ஆம் ஆண்டு முதல் இதுவரை வரி செலுத்தப்படவில்லை. இந்த மொத்த நிலுவைத்தொகை ரூ.9,66,540 ஆகும்.

இதன் மூலம் மொத்தம் ரூ.3,26,66,571 செலுத்த வேண்டி உள்ளது. பலமுறை நேரிலும், தபால் மூலமும் வரி செலுத்தக்கோரிய நோட்டீஸ் அனுப்பியும் பணம் செலுத்தாத நிலையில் நேற்று கமிஷனர் கௌரவ் குமார் உத்தரவில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி சட்டம் 2023ன்படி அசையாச் சொத்துகள் பறிமுதல் செய்வதற்கான படிவம் 7 அறிவிப்பு நோட்டீஸ் வழங்கி மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாநகராட்சி துணை கமிஷனர் ராஜாராம் தலைமையில், உதவி கமிஷனர் குமரன், உதவி வருவாய் அலுவலர் ஜார்ஜ் ஆலிவர் லாரன்ஸ் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் இந்த நோட்டீஸ் வழங்கினர்.