திருமங்கலம், ஆக.8: நான்குவழிச்சாலை சர்வீஸ் ரோட்டை ஒட்டி அமைந்துள்ள ஆலம்பட்டி அரசு பள்ளி மாணவ, மாணவியர் மிகவும் ஆபாத்தான நிலையில் சாலையை கடக்கும் நிலை உள்ளது. எனவே பள்ளிக்கு எதிரே வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.திருமங்கலம் ராஜபாளையம் நான்குவழிச்சாலையில் அமைந்துள்ளது ஆலம்பட்டி. திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வழியாக கொல்லம் வரையில் செல்லும் இந்த நான்குவழிச் சாலையில் முதல் கிராமமாக ஆலம்பட்டி அமைந்துள்ளதால் கிராமத்தின் நடுவே நான்குவழிச்சாலை செல்கிறது. இதன் காரணமாக புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
மேம்பாலத்தின் அருகே இருபுறமும் சர்வீஸ் ரோடு போடப்பட்டுள்ளது. இதில் சர்வீஸ் ரோட்டினையொட்டி ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 75 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். 7 ஆசிரியர்கள் பணி செய்து வருகின்றனர். பள்ளிக்கு வந்து செல்லும் மாணவ, மாணவியர் சர்வீஸ் ரோட்டை கடந்து தான் பள்ளிக்கு வரவேண்டும். சர்வீஸ் ரோட்டில் டவுன்பஸ்கள், கார்கள், டூவீலர்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் விபத்து அபாயம் உள்ளது.
மாணவ, மாணவியர் பள்ளி முடிந்தபின்பு வீடு செல்லும் அவசரத்தில் சர்வீஸ் சாலையை கடக்க முயல்கின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் இந்த பகுதியில் இருபுறமும் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர். அதே போல் ஆலம்பட்டி பள்ளிக்கு முன்பு பஸ்ஸ்டாப் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. பள்ளிக்கு வருவோர் சேடபட்டி பிரிவு அல்லது ராஜபாளையம் பிரிவு அருகேயுள்ள ஆலம்பட்டி பஸ்ஸ்டாப்பில் இறங்கி ஏற வேண்டியுள்ளது. எனவே ஆலம்பட்டி பள்ளிக்கு முன்பாக பஸ்ஸ்டாப் அமைக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



