மேலூர், செப். 7: மேலூர் யூனியன் அலுவலகம் அருகே அமைந்துள்ள கிருஷ்ணன் கோயிலில் 40ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக கடந்த ஆக.30ம் தேதி அழகர்கோவில் நூபுர கங்கையில் தீர்த்தமாடி கொடியேற்றி, பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் கோமாதா பூஜை, மதுரை மீனாட்சி கலையரங்கம் சார்பில் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி கோயில் முன்பு நடைபெற்றது.
பின்னர் மாலையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர். நேற்று காலை பக்தர்கள் மண்கட்டி தெப்பகுளத்தில் இருந்து நகரின் முக்கிய வீதிகளான நகை கடை பஜார், பெரிய கடை வீதி, பஸ் ஸ்டாண்ட் வழியாக பால் குடம் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தன. தொடர்ந்து உறியடி திருவிழா நடைபெற்றது. பின்னர் கோவில் முன்பு நடந்த அன்னதானத்தில் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாலையில் ரத ஊர்வலம் நடைபெற்றது.

