மதுரை, செப். 7: மண் புழுக்கள் மண்ணில் வேதியியல் விளைவுகளை உருவாக்கி பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை விநியோகம் செய்யவும், கடத்தவும் உதவுகின்றன என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது: மண் புழுக்கள் மண்ணின் வேதியியல் கலவையினை மாற்றுகின்றன. மண் பரப்பில் உள்ள இலை கழிவுகளையும், இதர அங்கக பொருட்களையும் அதிகப்படியாக உட்கொள்வதால் பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை விநியோகம் செய்யவும், கடத்தவும் உதவுகின்றன. மண் புழுக்கள் அங்கக பொருட்களை மண்ணின் அடி மட்டத்திற்கு எடுத்து செல்ல உதவுகின்றன. அதேவேளையில் பெரும்பாலான அங்கக பொருட்கள் உட்கொள்ளப்பட்டு, சிதைக்கப்பட்டு பின் வெளியேற்றப்படுகின்றன.
மண்ணின் கார அயனி மாற்று திறன், மொத்த அங்கக பொருட்கள், மாற்ற தகுந்த மொத்த கார அயனிகள், மணிச்சத்து, மாற்ற தகுந்த சாம்பல் மற்றும் மாங்கனிசு சத்து, மாற்ற தகுந்த சுண்ணாம்பு சத்து போன்றவை அதிகரிக்கிறது. பாக்டீரியாக்களின் எண்ணிக்கையும், மண்ணின் காற்றோட்டமும் அதிகரிப்பதால் நைட்டிரிபிகேஷனுக்கு இவை சாதகமாக உள்ளன. மண் புழுக்களின் தசை புரதச்சத்து நிறைந்ததாக இருப்பதால் இவை சிதைவுறும் வேளையில் நைட்ரேட், நைட்ரஜனை மண்ணிற்கு கொடுக்கும் தன்மையுடையது. மேலும் கரையும் நிலையில் உள்ள தழைச்சத்து நுண்ணுயிர்களிலுள்ள புரதமாக மாற்றப்படுகிறது.
இவ்வாறு மாற்றப்படுவதால் தழைச்சத்து நீரில் கரைந்தழியும் நிலையிலிருந்து பாதுகாக்கப்படுகிறது. மண் புழுவின் 20 முதல் 40 செமீ துளையிட்டு மண்டலத்தில் உள்ள மண்ணில் 40 சதவீதம் காற்று வாழ் தழைச்சத்து நிலை நிறுத்திகள், 13 சதவீதம் காற்றற்ற நிலைவாழ் தழைச்சத்து நிலை நிறுத்திகள், 16 சதவீதம் தழைச்சத்து நீங்கிகள் ஆகியவை உள்ளன. புழு கழிவு திரட்டில் கரிம மற்றும் தழைச்சத்து விகிதாச்சாரம் சுற்றியுள்ள மண்ணை விட அதிகமாக இருக்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

