Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

மதுரையில் ரூ.43 கோடியில் 5 தளங்களுடன் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் நல சிகிச்சை மைய கட்டிட பணிகள் நிறைவு

மதுரை, மே 7: மதுரையில் ரூ.43 கோடி மதிப்பீட்டில் 5 தளங்களுடன் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் நல சிகிச்சை மைய கட்டிட பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், சில வாரங்களில் இப் புதிய கட்டிடம் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது. மைய மருத்துவமனையின் பழைய கட்டிடத்தில் கூடுதல் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை தரப்படுகிறது.

மதுரை அரசு மருத்துவமனையின் மருத்துவக்கல்லூரி வளாக பகுதியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ பிரிவின் அருகில் ரூ.43 கோடியில் ஐந்து தளங்கள் கொண்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 200 படுக்கை வசதிகளுடன், நவீன சிகிச்சை கருவிகள் உள்ளிட்டவைகளும் முழுமையாக குழந்தைகள் சிகிச்சை மையமாக இக்கட்டுமானம் அமைகிறது. தற்போது மதுரை அரசு மைய மருத்துவமனையில் செயல்பட்டு வரும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடம் இடநெருக்கடியால் தவித்து வருகிறது. 25 ஆண்டுகள் கடந்துள்ள இக்கட்டிடம் சீரமைக்கும் கட்டாயத்தில் இருக்கிறது.

இதனை கருத்தில் கொண்டே கடந்த திமுக அரசு சிறப்பு நடவடிக்கையில், மருத்துவக்கல்லூரி வளாக பகுதியில் இந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு கட்டிடத்தை கட்டியது. முதல்கட்டமாக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டு, 2023 ஜூனில் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இரு தளங்களுக்கு அடிக்கல் நாட்டி பணிகள் நடந்தன. ஒருங்கிணைந்த குழந்தைகள் சிகிச்சை மையமாக இக்கட்டிடம் அமையும் வகையில் மீண்டும் ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தற்போது தரைத்தளத்துடன் 5 தளங்கள் கட்டுமானம் கண்டுள்ளன. பொதுப்பணி துறையின் கீழ் கட்டிட மின் இணைப்பு, குடிநீர், கழிவுநீர் இணைப்பு பணிகளுடன், ஆக்சிஜன் யூனிட், ஏசி யூனிட்களுக்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

இதுகுறித்து மதுரை மாவட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: மதுரை மருத்துவக்கல்லூரி வளாக பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு ஐந்து தளங்களுடான கட்டுமானம் நிறைவடைந்துள்ளது. தேர்தல் அறிவிப்பு காரணங்களால் திறப்பு விழா காணாத நிலையில், சில வாரங்களில் கட்டிடம் பயன்பாட்டிற்கு வழங்கப்படும். அரசு மைய மருத்துவமனையில் செயல்பட்டு வரும் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு இந்த ஒருங்கிணைந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டதும், அந்த பழைய கட்டிடம் தற்காலிகமாக புற்றுநோய் சிகிச்சை பிரிவிற்கு வழங்கப்படும். அரசு மைய மருத்துவமனையில் செயல்பட்டு வரும் புற்றுநோய் பிரிவானது இடநெருக்கடியி்ல இருப்பதால், அண்ணா பஸ்ஸ்டாண்டில் ஒருங்கிணைந்த புற்றுநோய் மையம் கட்டுமானம் கட்ட முடிவாகியுள்ளது. எனவே, அங்கு புற்றுநோய் கட்டுமானப்பணிகள் நடந்து முடியும் வரையிலும் இந்த பழைய கட்டிடத்தில் கூடுதல் படுக்கைகள் ஒதுக்கி, கூடுதல் புற்றுநோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை வழங்கப்படும்.

இவ்வாறு கூறினார்.