மதுரை, ஆக.5: மதுரை சேர்ந்த விளையாட்டு வீரர் 20 ஆண்டுகளுக்குபின் காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். காமன்வெல்த் நாடுகளுக்கு இடையேயான 23வது விளையாட்டுப்போட்டிகள் ஸ்காட்லாந்து நாட்டில் கிளாஸ்கோ நகரில் நடந்தது. இதில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பங்கேற்றன. இதில், இந்தியா 13 தங்கம் உள்பட 39 பதக்கங்களை வென்று 4வது இடத்தை பிடித்து சாதனை படைத்தது. இதில் முத்தான மூன்று பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு ராஜா முத்துப்பாண்டி, பிரவீன் சித்ரவேல் மற்றும் செல்வபிரபு ஆகியோர் பெருமை சேர்த்துள்ளனர்.
இதில் ராஜாமுத்துப்பாண்டி பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். மும்முறை தாண்டும் போட்டியில் வீரர் பிரவீன்சித்ரவேல் 16.58 மீ தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார். இதே போட்டியில் செல்வபிரபு 16.52 மீ தூரத்தை தாண்டி வெண்கலப்பதக்கம் வென்றார். வெண்கலப்பதக்கம் வென்ற செல்வபிரபு, மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகேயுள்ள கொடிமங்கலத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் திருச்சியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பிரிவின் கீழ் உள்ள விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற்றவர்.
இவர் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றதன் மூலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு பின் மதுரைக்கு நேரடியாக பெருமை கிடைத்துள்ளது. இதற்கு முன்பாக கடந்த 2006ம் ஆண்டு ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் நடந்த 18வது காமன்வெல்த் பாரா விளையாட்டுப்போட்டிகளில், மதுரையை சேர்ந்த பாரா தடகள வீரர் ரஞ்சித்குமார், வட்டு எறிதலில் வெண்கல பதக்கம் வென்றார். இவரால் கடந்த 2006ல் மதுரைக்கு பெருமை கிடைத்தது. இந்நிலையில் செல்வபிரபுவால் மதுரைக்கு 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பெருமை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


