Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

தெருவில் ஓடுது பாதாளச்சாக்கடை கழிவுநீர் கலந்து வரும் குடிநீர்; பந்தல்குடி மக்கள் சாலைமறியல்

மதுரை, ஆக.5: குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்து நேற்று பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 27வது வார்டு பந்தல்குடி பகுதியில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. இங்கு குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாகவும், பாதாள சாக்கடை கழிவுநீர் தெருக்கள்தோறும் பெருக்கெடுத்து ஓடுவதாகவும் தொடர்ந்து புகார்கள் இருந்து வருகிறது. மேலும், இப்பகுதி ஆக்கிரமிப்புகளாலும் தவித்து வருவதன் பேரில் நடவடிக்கை கோரி தொடர்ந்து பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். எனினும் மாநகராட்சி நடவடிக்கை இல்லாத நிலையில் ஆத்திரத்திற்கு ஆளான பொதுமக்கள் நேற்று காலை செல்லூர் பந்தல்குடி வாய்க்கால் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சிம்மக்கல் வரையிலும், செல்லூர் ரோட்டில் தத்தனேரி வரையிலும் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. இதில் ஒரு ஆம்புலன்ஸ் மாட்டிக்கொள்ள போலீசார் கேட்டுக் கொண்டதன் பேரில், அதனை மட்டும் மறியலில் ஈடுபட்டவர்கள் வழிவிட்டு செல்ல அனுமதித்து, பிறகு மீண்டும் மறியலை தொடர்ந்தனர். இதனால் நகரின் முக்கிய பகுதியான செல்லூர் கோரிப்பாளையம் பகுதியில் சுமார் 45 நிமிடத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் கூறும்போது, ‘எங்களுக்கு அடிப்படை தேவையான குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. கொசுத்தொல்லை மற்றும் துர்நாற்றத்துடன்தான் வசிக்கிறோம். பலமுறை அதிகாரியிடம் புகார் கொடுத்தும் அலட்சியம் காட்டி வருகின்றனர்’ என்றனர்.