திருமங்கலம், செப். 5: திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை சுமார் ஒருமணி நேரத்திற்கு மேல் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் பலத்த மழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த மழையால் நகரில் கடந்த சில மாதங்களாக வாட்டிய வெயிலின் தாக்கம் குறைந்தது. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. இதே போல் சுற்றுவட்டார பகுதிகளான கிழவனேரி, திரளி, மேலக்கோட்டை, ஆலம்பட்டி, மறவன்குளம், நடுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது.
நீண்ட நாள்களுக்கு பின்பு கொட்டி தீர்த்த மழையால் பொதுமக்கள் மற்றும் ஆடிப்பட்டத்தில் விதைகளை விதைத்து காத்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதே போல் தொடர்ந்து விவசாயத்திற்காக மழை பெய்ய வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். திருமங்கலம் நகரில் இந்த மழையால் பஸ் ஸ்டாண்ட், மதுரை ரோடு, உசிலம்பட்டி ரோடு, சோழவந்தான் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

