மதுரை, செப். 5: மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் கிருஷ்ண பலராமர் கோயிலில் ஜென்மாஷ்டமி திருவிழா நேற்று சிறப்பாகவும், விமரிசையாகவும் நடைபெற்றது. ஜென்மாஷ்டமியை முன்னிட்டு கோயிலில் கிருஷ்ணர் பலராமருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, கிருஷ்ணர் பலராமருக்கு வண்ண மலர்களால் செய்யப்பட்ட சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கிருஷ்ணர் பலராமரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். விழாவையொட்டி கோயில் வளாகம் முழுவதும் பக்தி பாடல்கள், பஜனைகள் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகளால் களைகட்டியது. ஜென்மாஷ்டமி விழாவில் மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு, கிருஷ்ணர் மற்றும் பலராமரை தரிசனம் செய்தனர்.

