Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மதுரையில் கடந்த ஓராண்டில் கருத்தடை செய்து கொண்ட ஆண்கள் எண்ணிக்கை 26: பெண்கள் 9 ஆயிரத்திற்கும் அதிகம்

மதுரை, ஜூலை 3: மதுரையில் கடந்த ஆண்டு ‘வாசக்டமி’ எனும் ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சையை 26 பேர் மட்டுமே செய்து கொண்டுள்ளனர். கருத்தடை முறைகளில் பெண்களுக்கு பல்வேறு நிலைகள் இருப்பினும், ஆண்களுக்கென தனித்துவமானதாக ‘வாசக்டமி’ எனும் விந்து நாள தடுப்பு அறுவை சிகிச்சை இருக்கிறது. இந்த அறுவை சிகிச்சையை ஊக்குவித்திட சுகாதாரத்துறை சிறப்பு சலுகைகள் வழங்கியும், இச்சிகிச்சை பெற ஆண்கள் முன்வருவதில்லை. அதேநேரம் கருத்தடை சிகிச்சையை பெண்களே மேற்கொள்ளும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திலும் அவர்களே முன்நிறுத்தப்படுகின்றனர்.

பெண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சைக்கு அரசு சார்பில் வெறும் ரூ.600 தரப்படும் நிலையில், ஆண்களுக்கான விந்துநாளத் தடுப்பு அறுவை சிகிச்சைக்கு ரூ.1,200ஐ சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை ஊக்கத்தொகையை வழங்குகிறது. எனினும் மதுரை மாவட்டத்தில் கடந்த 2025ல் 26 ஆண்கள் மட்டுமே இச்சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அதேநேரம் கடந்த 3 ஆண்டுகளில் மதுரையில் மட்டுமே 30ஆயிரம் பெண்கள் வரை கருத்தரிப்பைத் தடுப்பதற்கான நிரந்தரக் கருத்தடை அறுவை சிகிச்சையை மேற்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதன்படி மதுரை மாவட்டத்தில் 2023ல் 10,335 பெண்கள், 2024ல் 9,495 பெண்கள், 2025ல் 9,031 பெண்கள்.

2026 ஏப்ரல் வரையிலும் 832 பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்துள்ளனர். அதேநேரம், இந்த மூன்று ஆண்டுகளில் வெறும் 123 ஆண்கள் மட்டுமே, ‘வாசக்டமி’ எனும் கருத்தடைக்கான விந்துநாளத் தடுப்பு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அதாவது, 2023ல் 52 பேர், 2024ல் 45 பேர் மற்றும் 2025ல் 26 பேர். 2026 ஏப்ரல் வரை 6 பேர் மட்டுமே வாசக்டமி கருத்தடை சிகிச்சை செய்துள்ளனர். எதிர்காலத்தில் சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சத்துடன், வலி கருதியும் இந்த அறுவை சிகிச்சையை ஆண்கள் மேற்கொள்ள முன்வருவதில்லை. ஆண்கள் இந்த சிகிச்சைக்கு சம்மதிப்பது சவாலான காரியமாக இருக்கிறது என சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

* மதுரை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குநர் டாக்டர் எஸ். நடராஜன் கூறும்போது, ‘பெண்களை விட ஆண்கள் நிரந்தர கருத்தடை செய்து கொள்வதே பலனளிக்கும். ஆனாலோ, 2, 3 குழந்தைகளுக்கு பிறகு பெண்கள்தான் கருத்தடை செய்துகொள்ள முன் வருகின்றனர். அப்போதும் கூட ஆண்கள் இந்த கருத்தடைக்கு முன்வருவதில்லை. அறுவை சிகிச்சையின்போது வலி வரலாம், பாலியல் செயல்பாட்டில், ஆண்மையில் பாதிப்பு ஏற்படலாம் போன்ற தவறான அச்சம் ஆண்களிடம் இருக்கிறது. உண்மையில் அதுபோன்ற பாதிப்புகள் இல்லை. ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும்’ என்றார்.