Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நடைப்பயிற்சி செல்வதற்கு கட்டணம் கடும் உயர்வு: மதுரை ரயில்வே மைதானத்தில் பொதுமக்கள் அதிர்ச்சி

மதுரை, ஜூலை 2: மதுரை, அரசரடி ரயில்வே மைதானத்தில் நடைபயிற்சிக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மதுரை, அரசரடி பகுதியில் ரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான மைதானம் அமைந்துள்ளது. இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் நடைப்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பயிற்சிக்கான கட்டணம் திடீரென அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி கடந்த 5 வருடங்களுக்கு மேலாக நடைப்பயிற்சி மேற்கொள்ள மாதம் ரூ.200 வசூலிக்கப்பட்டு வந்தது. இது தற்போது ரூ.400 என இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், உடற்பயிற்சி நிலையத்தில் ரூ.300 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.750 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கு ஒரு மாத கட்டணம் ரூ.50ல் இருந்து ரூ.300 ஆக மாறியுள்ளது. இதேபோல் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பெறப்பட்டு வந்த ரூ.200 கட்டணம் தற்போது ரூ.750 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தினை பல ஆண்டுகளாக காலை மற்றும் மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு இந்த திடீர் கட்டண உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இந்த முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, அவர்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.