பள்ளிபாளையம், அக்.5: பள்ளிபாளையம் நகராட்சியில் 3 இடங்களில் பஸ் நிறுத்தங்கள் புதிதாக அமைக்கப்படுகிறது. இதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றது. பள்ளிபாளையம் நகராட்சியில் பாலம் ரோட்டில் 2 இடங்களில் நிழற்கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தது. மேம்பாலம் கட்டுமான பணிக்காக இந்த நிழற்கூடங்கள் அகற்றப்பட்டன. தற்போது மேம்பாலம் பணிகள் நிறைவடையும் நிலையில் இருப்பதால், பயணிகளுக்காக மீண்டும் பஸ் நிறுத்தம் அமைத்து, அங்கே நிழற்கூடங்கள் அமைப்பதற்கான பணிகளில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. கடந்த நகர்மன்ற கூட்டத்தில் 3 இடங்களில் பயணிகள் பஸ் நிறுத்தம் அமைப்பதற்காக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதன்படி திலகம் பெட்ரோல் பங்க் அருகே ஈரோடு செல்லும் பஸ் நிறுத்தம் அமைக்கப்படுகிறது. நாமக்கல், ராசிபுரம் செல்லும் பயணிகளுக்காக நெல்லை மெஸ் அருகேயும், சங்ககிரி, சேலம் செல்லும் பயணிகளுக்காக ஐயங்கார் பேக்கரி அருகேயும் பஸ் நிறுத்தம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இடம் தேர்வு பணியில், நகரமன்ற தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் பாலமுருகன் மற்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர்.
+
Advertisement


