கூலித்தொழிலாளி விஷம் குடித்து சாவு
குளச்சல், ஜன.6 : வெள்ளிச்சந்தை அருகே வேம்பனூர் விளைவீடை சேர்ந்தவர் ஐயப்பன் (63). கூலித்தொழிலாளி. மது அருந்தும் பழக்கம் இருந்ததால் மனைவி கிருஷ்ணகுமாரியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு வில்லுக்குறியில் உள்ள மகள் வீட்டிற்கு சென்ற கிருஷ்ணகுமாரி நேற்று முன்தினம் காலை வீடு திரும்பினார். அப்போது வீடு உள்பக்கம் பூட்டியிருந்ததால் கிருஷ்ணகுமாரி பின் பக்க கதவை தள்ளி திறந்து உள்ளே சென்று பார்த்து உள்ளார். அப்போது ஐயப்பன் மயங்கி கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஐயப்பனை பரிசோதித்த மருத்துவர், ஐயப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து கிருஷ்ணகுமாரி அளித்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வாழ்க்கையில் வெறுப்படைந்த ஐயப்பன் வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில் விஷம் குடித்து இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.