போச்சம்பள்ளி, ஆக.29: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 5 லட்சம் ஹெக்டர் நிலப்பரப்பில், 2 லட்சம் ஹெக்டர் வனப்பகுதிகளாக உள்ளது. தமிழகத்தில் அதிக வனப்பரப்பு உள்ள மாவட்டங்களில் கிருஷ்ணகிரியும் ஒன்று. இங்கு யானைகள், கடமான், புள்ளிமான் காட்டுப்பன்றி, சிறுத்தை மலைபாம்பு ஆகிய விலங்குகள் வாழ்கின்றன.
குறிப்பாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வருகிறன. இதேபோல் மயில்களும், மான்களும் வேப்பனஹள்ளி, தொகரப்பள்ளி காப்பு காட்டு பகுதியில் அதிகம் உள்ளன. மாவட்டத்தில் மயில்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் வன துறையால் கணக்கிட முடியவில்லை என கூறுகின்றனர்.
மயில்கள் விவசாய நிலங்களுக்கு சென்று பயிர்களை சாப்பிட்டும், அருகில் உள்ள ஏரி, குளம், குட்டைகளில் இருக்கும் தண்ணீரை பருகியும் உயிர் வாழ்ந்து வந்தன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக, மாவட்டத்தில் மழையின்றி விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளது. ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீரின்றி வறண்டு காணப்படுவதால் உணவு, தண்ணீர் கிடைக்காமல் நகர்புறங்கள், சாலையோரங்களில் உணவு தேடி மயில்கள் கூட்டமாக சுற்றி வருகின்றன.
அவ்வாறு வரும் மயில்கள், வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது. இதனால், போதிய உணவு மற்றும் தண்ணீரை வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை
எழுந்துள்ளது.



