கிருஷ்ணகிரி, ஆக.29: கிருஷ்ணகிரியில் நடந்த மாவட்ட அளவிலான பெண் குழந்தைகளுக்கான இறகுப்பந்து மற்றும் சிலம்ப போட்டிகளில் 201 மாணவிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு அரங்கில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தில், மாவட்ட அளவில் பெண் குழந்தைகளுக்கு இறகுப்பந்து மற்றும் சிலம்பம் போட்டிகள், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. இந்த போட்டிகளை, மாவட்ட சமூக நலன் அலுவலர் சக்தி சுபாஷினி தொடங்கி வைத்தார்.
இதில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் (பொ) நடராஜமுருகன், சிலம்பம் மாவட்ட விளையாட்டு சங்க செயலாளர் பவுன்ராஜ், இறகுப்பந்து விளையாட்டு சங்க செயலாளர் ஷராபத் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர். இப்போட்டியில், 14 மற்றும் 17 வயது பிரிவில் சிலம்பம் விளையாட்டில் 126 மாணவிகளும், இறகுப்பந்து விளையாட்டில் 75 மாணவிகளும் என மொத்தம் 201 மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள்
வழங்கப்பட்டன.



