போச்சம்பள்ளி, செப்.26: நாகரசம்பட்டி அருகே, சொத்து தகராறில் தந்தையை அரிவாளால் வெட்டிய மகனை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், நாகசரம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மருதேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகன் அகிலன்(28). தந்தை, மகனுக்கிடையே நிலத்தில் உள்ள தென்னை மரங்களை வெட்டி விற்பனை செய்வதில், தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில், இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திமடைந்த அகிலன், வீட்டிலிருந்த அரிவாளால் தந்தை என்றும் பாராமல் ராமமூர்த்தியை சரமாரியாக வெட்டினார். இதில், தலையில் படுகாயமடைந்த ராமமூர்த்தி வலியால் துடித்தார். அதனைக் கண்டு அங்கிருந்து அகிலன் ஓட்டம் பிடித்தார்.
உடனே, அருகில் இருந்தவர்கள் ராமமூர்த்தியை மீட்டு போச்சம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராமமூர்த்தி அளித்த புகாரின் பேரில், நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து அகிலனை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஊத்தங்கரை கிளை சிறையிலடைத்தனர்.


