கிருஷ்ணகிரி, செப்.26: கிருஷ்ணகிரி அருகே தொழிலதிபரை தாக்கி நகை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 வாலிபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. கிருஷ்ணகிரி அருகே புஷ்பகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்சுந்தரம்(42), தொழிலதிபரான இவர், கடந்த மாதம் 26ம் தேதி கிருஷ்ணகிரி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கந்திகுப்பம் அருகே தனது காரில் சென்ற போது, அவ்வழியாக டூவீலர்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், சுந்தரத்தை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த மூன்றரை பவுன் நகையை பறித்துச்சென்றது.
இதுபற்றிய புகாரின் பேரில், கந்திக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சுந்தரத்தை தாக்கி நகையை பறித்துச் சென்ற கிருஷ்ணகிரி கொத்தபேட்டா குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அசோக்(எ) அசோக்குமார்(24), தர்மராஜா கோயில் தெரு காதர்பாஷா(21), பழையபேட்டை செந்தில்முருகன் கோயில் தெரு விஷ்ணு(23) ஆகிய 3 பேரையும் கைது செய்து சேலம் சிறையிலடைத்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாவட்ட எஸ்பி அனிதா, கலெக்டரிடம் பரிந்துரை செய்தார். அதன்பேரில், கலெக்டர் தினேஷ்குமார், 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான நகலை, சேலம் சிறையில் உள்ள 3 பேரிடமும் போலீசார் வழங்கினர்.


