கிருஷ்ணகிரி, செப்.25: கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நீர்வரத்து 806 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இதன் காரணமாக, கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து 569 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று காலை விநாடிக்கு 806 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 162 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
அணையின் மொத்த உயரமான 52 அடியில், தற்போது 49.60 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து 581 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று காலை 445 கனஅடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில், 42.15 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.


